தமிழ்நாடு

சி.சி.டி.வி. கேமராவிற்கு மாலை அணிவித்து மரியாதை- குறிஞ்சிப்பாடி போலீசார் அதிரடி

Published On 2023-03-05 10:33 GMT   |   Update On 2023-03-05 10:33 GMT
  • தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன.
  • குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர்.

மந்தாரக்குப்பம்:

குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும். ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு போலீஸ் துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.

ஆனால், சமீப காலங்களில் இந்த முறைகள் ஏதும் போலீசாருக்கு பயன்படவில்லை. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன. குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் எளிதில் அடையாளம் காண்கின்றனர்.

அதன்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டூடியோ உரிமையாளர் குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.

குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News