தமிழ்நாடு

உசிலம்பட்டியில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

Published On 2024-04-16 05:45 GMT   |   Update On 2024-04-16 05:45 GMT
  • உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.
  • கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் தேனி பிரதான சாலையில் அமைந்துள்ள முக்கியமான ஊராக உசிலம்பட்டி விளங்கி வருகிறது. உசிலம்பட்டியை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்களுக்கு இந்த ஊரே பிரதான வர்த்தக மையமாக இருந்து வருகிறது.

மேலும் பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை நம்பி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் உள்ளது.

உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், உசிலம்பட்டி வழியாக வந்து செல்லும் பயணிகளும், கிராம மக்களும் இந்த கடைகளையே நம்பியுள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையொட்டி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சந்தை பகுதியில் அமைந்துள்ள 140 கடைகளின் கட்டிடங்களை இடித்து விட்டு அப்பகுதியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நம்பி வாழ்ந்து வரும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு வேலை நிறுத்தத்திற்கு வர்த்தக சங்கத்தினரும், வியாபாரிகளும், அனைத்து கட்சியினரும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து இன்று பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடைகளின் கட்டிடங்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் கடைகள் மூடப்பட்டன.

இந்த போராட்டத்திற்கு உசிலம்பட்டி வட்டார வர்த்தக சங்க தலைவர் ஜவகர், தேனி ரோடு பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் இலைக்கடை ரமேஷ், செயலாளர் ராம ராஜ், பொருளாளர் சசி, ஆனந்தகுமார், பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கடையடைப்பு போராட்டம் காரணமாக தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்ட சூழலில் உசிலம்பட்டி பரபரப்பாக காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசியல் கட்சியினர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்ய இயலாமல் போனதால் அங்கும் மக்கள் நடமாட்டம் குறைந்து அமைதியாக காணப்பட்டது. மார்க்கெட் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News