தமிழ்நாடு

கவர்னர் தமிழிசையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசியபோது எடுத்த படம்.


மின்துறை ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு- கவர்னர் தமிழிசை உறுதி

Published On 2022-09-30 09:27 GMT   |   Update On 2022-09-30 09:27 GMT
  • புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து கவர்னர் தமிழிசையுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி:

புதுவை மின்துறையை தனியார் மயமாக்க டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து, மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அங்குள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை வம்பாகீரப்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்ததினால் புதுவை நகரம் புறநகர் மற்றும் கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மக்கள் சாலை மறியல், மின்துறை அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் கோரிமேடு காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, மற்றம் கிராம பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து கவர்னர் தமிழிசையுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

காலை 10.45 மணிக்கு கவர்னர் மாளிகை வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னருடன் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அவுட் சோர்சிங் முறையில் மின்துறை பணியாளர்களை நியமித்தது மற்றும் ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை பணிக்கு அழைத்தது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், தொடர்ந்து அத்தியாவசிய பணிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

ஆலோசனையின்போது தலைமை செயலர் ராஜீவ்வர்மா, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறை செயலர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் புதுவையில் இருக்காது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே தனியார் மயமாக்க ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

மக்களுக்கான மின்சாரத்தில் தடையை ஏற்படுத்துவது நல்லது அல்ல. குழந்தைகள் படிப்பார்கள். மங்கல நிகழ்வுகள் வீடுகளில் நடைபெறும். சுயநலத்திற்காக மின்தடையை ஏற்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். சட்டப்பூர்வமாக அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பது குறித்துதான் நாங்கள் விவாதித்தோம்.

மேலும், தற்போதுள்ள காய்ச்சல் சூழ்நிலை, மருத்துவமனைகளை மேம்படுத்துவது, நூலகங்களை பார்வையிட்டது கபற்றியும் உலக தமிழ்மாநாடு குறித்து பேசியுள்ளோம். இதுஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு. மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை நடத்த கூடாது. மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் சென்றார்.

Similar News