தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை வெளியீடு

Published On 2022-10-13 06:18 GMT   |   Update On 2022-10-13 06:18 GMT
  • கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
  • இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.

இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.

இந்த தொகையை மின் வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.

சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சிலர் ஒரே வீட்டிற்கு 3,4, மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால் கட்டணம் குறைந்து விடுகிறது.

இதனால் தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.

ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 100 யூனிட் வரை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர், மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பவர்கள் பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அரசிதழலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News