தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் தரைப்பாலம் சேதம்- வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2023-01-07 06:36 GMT   |   Update On 2023-01-07 06:36 GMT
  • கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படவே தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது.
  • தரைப்பாலத்தில் சேதம் அடைந்த ஒரு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் திருவள்ளூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

இந்த பாலத்தை பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேதமடைந்த தரைப்பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிகமாக சீரமைத்தனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படவே, தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது.

இந்த தரைப்பாலத்தில் சேதம் அடைந்த ஒரு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகிறார்கள். இதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனி மேலும் காலதாமதம் செய்யாமல் சத்தரை கூவம் ஆற்றின் குறுக்கே சேத மடைந்த தரைப்பாலத்தை முழுவதுமாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News