கோப்பு படம்
தலையணை, போர்வை அழுக்காக இருப்பதாக கூறி சென்னை ரெயிலை அரக்கோணத்தில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்
- அரக்கோணத்தில் நிற்காத அந்த ரெயிலை பயணிகள் அரக்கோணத்தில் நிறுத்தினர்.
- ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
அரக்கோணம்:
சென்னை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் வாராந்திர விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு புறப்பட்டு சென்றது.
நள்ளிரவு 12.30 மணி அளவில் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் ஏ1, ஏ2 மற்றும் பி1 முதல் பி4 என 6 ஏசி பெட்டிகளில் போர்வை மற்றும் தலையணை சுத்தப் படுத்தப்படாமல் அழுக்காக இருந்ததாக கூறப்படுகிறது. அதை மாற்றித் தருமாறு பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அரக்கோணத்தில் நிற்காத அந்த ரெயிலை பயணிகள் அரக்கோணத்தில் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ரெயில் நிலைய அதிகாரிகள் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து ஏக்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.