தமிழ்நாடு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தூத்துக்குடியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-04-15 06:22 GMT   |   Update On 2023-04-15 06:22 GMT
  • மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
  • விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காலங்களில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் படிப்பதற்கு அனுமதியில்லை. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும். நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டு தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை காலத்தையொட்டி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். தடை காலம் தொடங்கியதால் அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலமாக மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் 2 ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு தடைகாலம் பொருந்தாது.

Tags:    

Similar News