தமிழ்நாடு

மாணவரை மொட்டையடித்து ராகிங் செய்த 7 மாணவர்கள் ஜெயிலில் அடைப்பு: போலீசார் கடும் எச்சரிக்கை

Published On 2023-11-09 06:12 GMT   |   Update On 2023-11-09 06:12 GMT
  • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
  • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கோவை:

கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News