தமிழ்நாடு

லெசர் நோடி எனப்படும் சாம்பல் தலை ஆலா

சென்னை கடற்கரைக்கு வந்த புதிய வகை வெளிநாட்டு பறவைகள்

Published On 2022-12-16 07:33 GMT   |   Update On 2022-12-16 07:33 GMT
  • பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதிய வரவாக வெளிநாட்டு கடற்பறவைக் தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
  • பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது.

சென்னை:

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தற்போது இந்த புயல் காற்றிற்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு தற்போது வெளிநாட்டில் இருந்து பல்வேறு வகை கடற்பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

கேளம்பாக்கம் ஏரிப்பகுதியில் லெசர் நோடி எனப்படும் சாம்பல் தலை ஆலா, சைபீரியாவில் இருந்து ஆர்க்டிக் ஸ்குவா, ஆஸ்திரேலியாவில் இருந்து டெர்ன்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் சூட்டி டெர்ன் போன்ற பறவைகள் வந்து உள்ளன.

இதே போல் பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதியவரவாக வெளிநாட்டு கடற்பறவை தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக பறவைகள் கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் காற்றுக்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிக்கு வெளிநாட்டு கடல் பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. ஆழ்கடலில் வாழும் பெலாஜிக் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே நிலத்திற்கு வரும். அது குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு முறை சென்னை புயலை சந்திக்கும் போதும் இந்த வகை பறவை இங்கு வருகிறது.

கேளம்பாக்கம், பள்ளிக்கரணை, பழவேற்காடு பகுதிகளிலும் சில பறவைகள் வந்துள்ளன. சூறாவளியை உணர்ந்து சில பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது, அந்த காற்று சில பறவைகளை நமது நீர்நிலைகளுக்கு கொண்டு வருகின்றன.

உள்ளூர் பறவைகள் அவற்றை விரட்டுவதால் அவை ஒரு வாரத்திற்கு மேல் உயிர்வாழ்வது கடினம் ஆகும். இந்த வகை பறவைகள் புயலுக்குப் பிறகு நிலத்தை நோக்கி வருகின்றன.

இந்த முறை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது. இது மற்ற பறவைகள் மீன் பிடிக்கும் வரை காத்திருக்கும். பின்னர் அவற்றிடம் இருந்து அதனை பறித்து சென்று விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரை அருகில் செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். தற்போது குளத்துமேடு, கணவான் துறை ஏரி தீவு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி குறைந்த அளவில் வந்துள்ளன.

பூ நாரை, கரியலிஸ் கோல்டன் ப்ளவர் மற்றும் உள்நாட்டு பறவைகளான பெலிக்கன் அரிவாள் மூக்கன், கொக்கு நாரை, கேர்தலின் வாத்து, சோ பிரிக்ஸ் உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. இனிவரும் நாட்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News