தமிழ்நாடு

பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் ஏரிகளில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

Published On 2023-11-15 07:17 GMT   |   Update On 2023-11-15 07:17 GMT
  • சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட ஏராளமான வகை வாத்துக்கள், பறவைகள் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளன.
  • வெள்ளை வாலாட்டி பறவை, கொசு உள்ளான், நீளக்கால் உள்ளான், பொரிஉள்ளான் உள்ளிட்ட பறவைகளை சதுப்பு நிலத்தில் காணலாம்.

சோழிங்கநல்லூர்:

பள்ளிக்கரணை சதுப்புநில ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிக்கரணை ஏரி முழுவதும் பல்வேறு வகையிலான பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதியை பார்வையிட ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

சாம்பல் கூழைக்கடா, அரிவாள் மூக்கன் ஆகிய இரண்டு இன பறவைகள் பள்ளிக்கரணை ஏரியில் கூடு கட்டத்தொடங்கி உள்ளன. இவை ஏராளமாக மரங்களில் இருப்பதை காண முடிகிறது. வேடந்தாங்கலில் பறவைகள் கூடுகட்ட தொடங்காத நிலையில் பள்ளிக்கரணையில் பறவைகள் கூடுகள் கட்டி வருவது பறவைகள் ஆர்வலர்களை ஆச்சரியம் அடைய செய்து உள்ளது.

சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட ஏராளமான வகை வாத்துக்கள், பறவைகள் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளன. இதேபோல் பெரும்பாக்கம் ஏரிக்கும் ஏராளமான பறவைகள், பலவகை வாத்து இனங்கள் வந்து உள்ளன.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "சைபீரியாவில் இருந்து 4 வகையான வாத்துகள் பள்ளிக்கரணை ஏரிப்பகுதிக்கு வந்து உள்ளன. தட்டைவாயன் வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு, கிருவைத்தாரா பறவைகள் கூடுகள் கட்டாது.

வெள்ளை வாலாட்டி பறவை, கொசு உள்ளான், நீளக்கால் உள்ளான், பொரிஉள்ளான் உள்ளிட்ட பறவைகளை சதுப்பு நிலத்தில் காணலாம். இது தவிர வேட்டையாடும் பறவைகளான பொரி வல்லூறு, சேற்று பூனைப் பருந்து மற்றும் அதிக புள்ளிகள் கொண்ட கழுகு உள்ளிட்டவையும் வந்து உள்ளன. தற்போது வேடந்தாங்கல், மதுராந்தகம் ஆகிய இரண்டு ஏரிகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை" என்றார்.

Tags:    

Similar News