தமிழ்நாடு

குன்னூரில் துரியன் பழ சீசன் தொடங்கியது- ஆர்வத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-07-23 08:57 GMT   |   Update On 2023-07-23 08:57 GMT
  • மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.
  • தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

குன்னூர்:

மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது.

இங்கு பல்வேறு அரியவகை பழ மரங்கள் உள்ளது. இவை சீசனுக்கு உகந்தவாறு விற்பனைக்கு வருகிறது. இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது துரியன் பழம்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த துரியன் பழ மரங்கள் அதிகளவில் உள்ளன.

இங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் துரியன் பழ சீசன் தொடங்கியது. அதன் பின்னர் 3 ஆண்டுகளாக துரியன் பழ சீசன் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது கல்லாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது. அங்குள்ள மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.

குற்றலாம் மற்றும் கல்லாறு பண்ணையில் விளைந்த துரியன் பழங்கள் தற்போது பர்லியார், வடுக தோட்டம் உள்பட குன்னூரில் உள்ள பழ கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

வெளி மார்க்கெட்டில் கிலோ 55 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

குழந்தை இல்லாத தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த பழத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியா ஆகும். மேலும் சீசன் காலமாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் உள்ளன.

இந்த பழகம் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை இருக்கும். பார்ப்பதற்கு பலாப்பழம் தோற்றத்தில் இருப்பதுடன், உண்டால் வெண்ணை போன்ற சுவை கொண்டதாகும்.

இந்த பண்ணையில் 50 துரியன் மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்களில் தற்போது துரியன் காய்த்து பழுத்து தொங்குகின்றன. இவை தானாகவே கீழே விழுந்து விடும். அவற்றை சேகரித்து விற்பனை செய்கிறோம். கிலோ ரூ.520 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

துரியன் பழ சீசன் தொடங்கியதை அடுத்து நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் கல்லார் பழப்பண்ணையை பார்வையிட்டு விட்டு, அங்கு விளையக்கூடிய துரியன் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News