தமிழ்நாடு

கனரக வாகன சான்றிதழ் பெற லாரி உரிமையாளர்களை அலைக்கழிப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2023-08-22 07:29 GMT   |   Update On 2023-08-22 07:29 GMT
  • சரக்குப் போக்குவரத்துகளின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் லாரி உரிமையாளர்கள்.
  • சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்,

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழில் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்குவதிலும், அரசின் வருவாயைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் கனரக உரிமையாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பதோடு, சரக்குப் போக்குவரத்துகளின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் லாரி உரிமையாளர்கள்.

கடந்த சில நாட்களாக புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இந்தச் சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும், இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் மாநில லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் வழங்கவும், புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரிஜிஸ்டர் மூலம் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News