செய்திகள்
மாணவர்களுக்கு முககவசம் வழங்கிய போலீஸ் அதிகாரி

பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்களுக்கு முககவசம் வழங்கிய போலீஸ் அதிகாரி

Published On 2021-03-26 18:25 IST   |   Update On 2021-03-26 18:25:00 IST
அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது முககவசம் அணியாமல் வந்தது பற்றியும், தற்போது முககவசம் வாங்க செல்வதாகவும் மாணவர்கள் கூறினார்கள்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க பிளஸ்-1 வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டதால், இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவா்களுக்கான வகுப்பு மட்டுமே நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதனை ஆசிரியர்கள் கண்டிப்புடன் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முககவசம் அணியாமல் பள்ளிக்கு வந்த 5 மாணவர்களை, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பினர்.

அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது முககவசம் அணியாமல் வந்தது பற்றியும், தற்போது முககவசம் வாங்க செல்வதாகவும் மாணவர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு தனது காரில் இருந்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முககவசத்தை அவர்களிடம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினார்.

மேலும் அவர், ரூ.6 ஆயிரத்துக்கு துவைத்து பயன்படுத்தும் வகையிலான 150 முககவசங்களை கடையில் இருந்து வாங்கிச்சென்று அந்த பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கி, நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவருடன் மாணவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Similar News