செய்திகள்
அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விஉள் ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம்- அன்பழகன் கண்டனம்

Published On 2020-11-24 03:27 GMT   |   Update On 2020-11-24 04:15 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம் காட்டி விட்டார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையை ஆளும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் சட்டரீதியான 50 சதவீத இடங்களை பெறாமல் திட்டமிட்டு சதிசெய்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார். படித்த இளைஞர்கள் இதை நம்பமாட்டார்கள்.

கடந்த ஆட்சியில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடாக 125 இடங்கள் பெற்று வந்த நிலையில் இந்த ஆட்சியில் ஒரு சீட் கூட ஏன் பெறவில்லை? தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை உடனடியாக பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை ஏன் பெற்றுத்தரவில்லை? இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக சட்டவரைவு தயார் செய்து சட்டமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை.

இப்போது அமைச்சரவையில் முடிவு செய்து சட்ட வரையறை தயாரித்ததாக கூறும் முதல்-அமைச்சர் நாராயணசாமி யாருடைய நன்மைக்காக காலம் தாழ்த்தி தனது கடமையில் இருந்து தவறினார்? எதையுமே காலத்தோடு செய்யாமல் திட்டமிட்டு நேரத்தை வீணடித்துவிட்டு மாற்றிமாற்றி பேசுவதில் என்ன இருக்கிறது?

மருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் கூட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு பெறுவதில் காலத்தோடு எதையும் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு தற்போது இதையே விவாதப்பொருளாக கவர்னருக்கு எதிராக கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரிய தவறை செய்து வருகிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே முன்னுக்குப்பின் முரணாக பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் விவரம் தெரியாமல் பேசுவதாக முதல்-அமைச்சர் கூறுவது சரியானதல்ல.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News