செய்திகள்
கோப்புப்படம்

வழிகாட்டு குழு உறுப்பினருக்கு எதிர்ப்பு- கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு பூட்டு

Published On 2020-10-09 09:18 GMT   |   Update On 2020-10-09 09:18 GMT
வழிகாட்டுகுழு உறுப்பினர் மோகன் வந்த நேரத்தில் அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப்பட்டிருந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் ஒரு அணியாகவும், தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு அணியாகவும் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள்.

மோகன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும், குமரகுரு எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுகுழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மோகன் வழிகாட்டுகுழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி வந்தார். அப்போது மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மோகனை வரவேற்கவும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்தனர். ஆனால் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் நீண்டநேரம் திறக்கப்படாமல் பூட்டு போட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சிலர் பூட்டை இரும்பு ராடால் உடைக்க முயற்சித்தனர். ஆனால் பூட்டை உடைக்கக்கூடாது என நிர்வாகிகள் எச்சரித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள் சமரசம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைப்பு செயலாளரும், வழிகாட்டுகுழு உறுப்பினருமான மோகன் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து சென்றார்.

வழிகாட்டுகுழு உறுப்பினர் மோகன் வந்த நேரத்தில் அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப்பட்டிருந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News