செய்திகள்
பாஜக எம்எல்ஏ சாமிநாதன்

புதுவை பட்ஜெட் கூட்டம் அதிக நாட்கள் நடத்த வேண்டும்- பா.ஜனதா வலியுறுத்தல்

Published On 2020-07-12 07:22 GMT   |   Update On 2020-07-12 07:22 GMT
புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாட்களாக நடத்த வேண்டும் என சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபை கூட்டத்தொடரில் பொதுமக்களின் பிரச்சினைகளை விவாதிக்க மறுத்து வருகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை இதுவரை ஒன்று நிறைவேற்றவில்லை. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை தீர்வு காணவில்லை.

பட்ஜெட் தாக்கல் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரியை வரவைத்து எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான தீர்வை எழுத்து மூலமாக பதில் அளித்து அதற்கான தீர்வை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அனுமதி அளிக்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் சபாநாயகர் செயல்படுகிறார்.

இந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் குறைந்த நாட்கள் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் நடத்தப்படுகிறது. இது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட். அரசுக்கு தைரியம் இருந்தால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாட்களாக நடத்த வேண்டும். கொரோனாவை தொற்று சமூக இடைவெளியை காரணம் காட்டக்கூடாது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதுவரை நடத்திய கூட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ எதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

தேவையெனில் சமூக இடைவெளியுடன் கம்பன் கலையரங்கத்தில் கூட இந்த சட்டபை கூட்டத்தொடரை நடத்துங்கள். தங்களின் இயலாமையை மறைக்க கவர்னரை காரணம் காட்டி ஆட்சியை நடத்தும் தாங்கள் இந்த முறை நடத்தும் பட்ஜெட் தொடர் மக்கள் நலனுக்காக இருக்கவேண்டும். இந்த கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்துவது சம்பந்தமாக சட்டசபை செயலருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் பேரிடர் நிவாரணமாக வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News