செய்திகள்
முன்னாள் எம்பி ராமதாஸ்

பட்ஜெட் குறித்து விவாதிக்க அமைச்சரவையை கூட்டியது ஏன்?- முன்னாள் எம்.பி. ராமதாஸ் கேள்வி

Published On 2020-07-12 07:05 GMT   |   Update On 2020-07-12 07:05 GMT
மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வராத நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்க அமைச்சரவையை கூட்டியது ஏன்? என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கேள்வி விடுத்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அ.தி.மு.க. மாநில கழக இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து அதிகார பூர்வமான, எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் வராமலே பட்ஜெட் பற்றி விவாதிப்பதற்கு அமைச்சரவை கூட்டி 5 நிமிடங்களில் கலைத்திருப்பது இந்த அரசின் திறமையின்மைக்கு உதாரணமாகும். அரசாங்க விதிப்படி எதுவுமே வாய்மொழி உத்தரவு மூலம் நடக்கக்கூடாது. எழுத்துப்பூர்வ உண்மைகளின் அடிப்படையில் தான் ஒரு அரசு முடிவு எடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அமைச்சரவையை கூட்டியது ஏன்? புதுவை அரசு அனுப்பிய பட்ஜெட்டின் எல்லா முடிவுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு கொடுத்து உள்ளதா? முடிவுகளை மாற்றி இருக்கிறதா? பட்ஜெட் நிதிக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறதா? என்ற விவரங்கள் எல்லாம் எழுத்துப்பூர்வ கடிதத்தில் தான் தெரியும். இந்த அடிப்படை ஆவணம் இல்லாமல் அமைச்சரவை எப்படி பட்ஜெட்டை பற்றி விவாதிக்க முடியும்.

கடந்த பிப்ரவரி மாதமே பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் நடந்து மார்ச் மாதமே பட்ஜெட் சமர்ப்பித்து இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியபோது முதல்-அமைச்சர் பட்ஜெட் ஆவணத்தை கவர்னருக்கு பிப்ரவரி மாதத்திலேயே அனுப்பினோம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவிட்டார் என்று கூறினார்.

இப்போது பட்ஜெட் பலமாதங்களாக மத்திய அரசிடம் கிடப்பில் உள்ளதால் பட்ஜெட் நேரத்தோடு சமர்ப்பிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இது தவறு. தன் சக்திக்கு மீறிய பட்ஜெட் தொகையை அனுப்பியதால் மத்திய அரசு கேள்வி கேட்டு விளக்கம் பெறுவது ஒரு இயற்கையான நிகழ்வு தானே தவிர காலதாமதம் அல்ல. இந்த ஆண்டு தான் மாநில திட்ட வாரியத்தின் ஒப்புதலை பெறாமல் பட்ஜெட்டின் நிதிஅளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜனநாயக மரபை மீறிய செயல். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வேன் என்று இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் அதற்கு நேர்மாறாக நடப்பது புதுச்சேரியின் மாண்பையும் புகழையும் குறைக்கும் செயலாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News