தமிழ்நாடு

வாலாஜாபாத் அருகே 100 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-06-10 08:47 GMT   |   Update On 2023-06-10 08:47 GMT
  • அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது.
  • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியின்போது பொதுப்பணித்துறை அனுமதியுடன், ஏரி மண்கள் ஏலம் விடப்படும். அந்த வகையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், உள்ள ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் ஏரி மண்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அவலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள பகுதிகளில் அதிக அளவில் ஏரி மண் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஏரி மண்கள் அவலூர்-வாலாஜாபாத் தரை பாலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த தரை பாலம் சேதம் அடைந்து உள்ளது. ஆனாலும், இந்த பாலத்தில் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் தினமும் சென்று கொண்டிருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக பள்ளிக்கு சென்று வருவார்கள்.

மாணவர்கள் செல்வதால் இந்த தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது, இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும், விபத்து ஏற்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் மாற்று பாதையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழியில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல இருப்பதால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News