இந்தியா

ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த ரெயில்வே ஊழியர்கள் - ரெயிலில் இருந்து கீழே இறங்கி ஓடிவந்த பயணிகள்

திருப்பதியில் ரெயிலில் திடீர் தீ விபத்து- பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர்

Published On 2022-11-30 06:46 GMT   |   Update On 2022-11-30 06:46 GMT
  • தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது.
  • தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வரை திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

நேற்று இரவு 11 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருப்பதி ரெயில் நிலையம் வந்தடைந்தது. திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு காலை 5.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் புறப்படுவது வழக்கம். இன்று அதிகாலை 5 மணிக்கு பயணம் செய்வதற்காக ரெயிலில் பயணிகள் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.

அப்போது எஸ்-6 பெட்டியில் உள்ள கழிவறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனைக்கண்ட ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News