செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இல்லை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Published On 2021-06-24 23:36 IST   |   Update On 2021-06-24 23:36:00 IST
புதுச்சேரியில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

புதுவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்ட உபகரணங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத் துறையிடம் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்கக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழாவின் போது ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி தருவதாக குமரன் ஸ்டோர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா 3-வது அலை வரும் என்றும், வராது என்றும் சிலர் கூறுகின்றனர். இருந்த போதிலும் நாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இந்த நிலையில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வகையான கொரோனா பாதிப்பு நமது மாநிலத்தில் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும்.

ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளேன். விமான நிலைய விரிவாக்கம் என்பது தமிழகம் - புதுவைக்கு நன்மையை தரும். சுற்றுலா மேம்படும்.

முதல்-அமைச்சர் வழங்கிய அமைச்சரவை பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் வருகிற 27-ந் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News