செய்திகள்
கைது

வீடுகளில் திருடிய போலீஸ்காரர் கைது

Published On 2021-06-13 07:18 IST   |   Update On 2021-06-13 07:18:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் 3 வீடுகளில் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவில் உள்ள வக்கீல் சந்து மற்றும் கான்வென்ட் தெற்கு தெரு பகுதியில் கடந்த 8-ந் தேதி அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடைபெற்றது.

இதுகுறித்து போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் (வயது 29) என்பதும், இவர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே போலீஸ்காரராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இவர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், சாத்தூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடியதும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News