செய்திகள்
புதுச்சேரி சின்னம்

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் -சென்னை உயர் நீதிமன்றம்

Published On 2021-06-02 09:30 GMT   |   Update On 2021-06-02 10:58 GMT
அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ள என வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு வாதிட்டது.
சென்னை:

புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சூழ்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.



இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.  

சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.


வழக்கு விசாரணையின்போது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News