செய்திகள்
ராம்குமார்(பழைய படம்) - சாந்தி(பழைய படம்).

சீர்காழியில் தாய், மகன் தற்கொலை- பரபரப்பு தகவல்கள்

Published On 2021-04-23 08:58 IST   |   Update On 2021-04-23 08:58:00 IST
சீர்காழியில், கடன் பிரச்சினையால் தூக்குப்போட்டு தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகராஜன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் காமராஜ் மனைவி சாந்தி(வயது 52) கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமாரும்(29) வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக தொங்கிய தாய் மகனின் உடல்களை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News