செய்திகள்
வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி இருப்பததை படத்தில் காணலாம்.

வண்டலூர் தாலுகாவில் தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளநீர்

Published On 2021-01-06 14:24 IST   |   Update On 2021-01-06 14:24:00 IST
வண்டலூர் தாலுகாவில் தொடர்மழையால் வீடுகளை சூழ்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்கிறது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வண்டலூர் தாலுகா நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் ஏரி போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர், எம்.ஜி.நகர் போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கன்னிவாக்கம் சாந்தா தேவி நகரில் வீடுகளை சுற்றி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுவரை அந்த பகுதியில் எந்த அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதேபோல பெருமாட்டுநல்லூர் ராஜாஜி நகர், விமல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு செல்லும் சாலையில் பெருமாட்டுநல்லூர்-மூலக்கழனி அருகே சாலையின் நடுவே மழை நீர் ஆறுபோல் ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நேற்று அதிகாலை முதல் மாலை வரை பெய்த மழையால் சென்னை- செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மழைநீர் தேங்கியுள்ளதால் சிறுவர்கள் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Similar News