செய்திகள்
கோப்பு படம்

புயல் எச்சரிக்கை: காரைக்காலில் கரைக்கு திரும்பாத 200 மீனவர்கள்- குடும்பத்தினர் அச்சம்

Published On 2020-11-24 05:34 GMT   |   Update On 2020-11-24 05:34 GMT
புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 200 மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

காரைக்கால்:

வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இதையொட்டி கடலோர பகுதி முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மீனவ கிராமங்களுக்கும் சென்று தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 11 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு 480 விசைப்படகுகளும், 1000 பைபர் படகுகளும் உள்ளன.

இந்த தொழிலை நம்பி 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். ஆழ்கடலில் விசைப்படகு மூலம் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கி மீன் பிடித்து கரை திரும்புவதுண்டு.

தற்போது புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 200 மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News