செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

நிவர் புயலை எதிர்கொள்ள புதுவையில் தொழிற்சாலைகள், கடைகள் இன்று மாலை முதல் மூடல்- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2020-11-24 04:30 GMT   |   Update On 2020-11-24 04:30 GMT
நிவர் புயலை எதிர்கொள்ள புதுவையில் தொழிற்சாலைகள், கடைகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக மாநில பேரிடர் மாநில அவசரகால மையத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து அரசுதுறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி புதுவையில் ஒவ்வொரு துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்கம்பம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை அகற்றவும், மரங்கள் கீழே விழாமல் பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

மின்சாரம் தடைபட்டாலும் தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் 12 மணி நேரத்தில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 99 சதவீத மீனவர்கள் புதுவைக்கு திரும்பி வந்துவிட்டனர். புதுவையில் ஒரு படகில் மட்டும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப வில்லை.

காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை, கடலோர காவல்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் காலக்கெடு இருக்கிறது. மீனவர்களின் படகு மற்றும் வலைகளை பத்திரமாக வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளோம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து போதுமான உணவு வழங்கப்படும்.

தாழ்வான பகுதிகளில் என்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளோம். புதுவையில் 84 மையங்கள் அமைத்துள்ளோம்.

வியாபார நிறுவனங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண் டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தி உள்ளோம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் 24மணி நேரமும் செயல்பட்டு தயார் நிலையில் உள்ளது.

புதுவையில் நானும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி ஆகியோரும் காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும் களப்பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

Similar News