செய்திகள்
கோப்புபடம்

வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2020-11-23 15:22 GMT   |   Update On 2020-11-23 15:22 GMT
வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வில்லியனூர்:

புதுவையில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெயிண்டர் அஜித், பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகத்தை ஒரு கும்பல் வழிமறித்து காரில் கல்வீசியும், அரிவாளால் வெட்டியும் அவரை கொலை செய்ய முயன்றது. வில்லியனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 10 ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளின் செல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து, தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் அய்யனார் என்கிற தடி அய்யனார் (28). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் குமார் புதுச்சேரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அய்யனாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அய்யனாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அய்யனார், புதுநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News