கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுவை அரசு அலட்சியம்: அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. ஆனால், புதுவை அரசு அலட்சியமாகவும், சுயநல நோக்கத்தோடும் செயல்படுவது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாய்வு, மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார்.
பள்ளி, கல்லூரி, மது பார்கள், சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளார். ஆனால், புதுவை அரசு கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எல்லைகளில் மருத்துவ முகாம்கள் கூட அமைக்கவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து கார், பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கவில்லை. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என கண்டறியும் தெர்மா மீட்டர் கூட இல்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர் வசதி இல்லை. சமீபத்தில் சகாதேவன் என்ற நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அரசு மருத்துவமனை நிலை இப்படியென்றால் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய மையங்களின் நிலை எப்படி இருக்கும்?
கொரோனா விஷயத்தில் மக்கள் லாபநோக்கத்துடன் செயல்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மது கடைகளும், சாராயக்கடைகளும் உள்ளது.
ஆனால் புதுவை அரசு இதனை மூட உத்தர விடவில்லை. தேசிய பேரிடர் போன்ற காலங்களில் கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், புதுவை கலெக்டர் முதல்-அமைச்சர் சொல்வதை மட்டும் செயல்படுத்துகிறார். மக்களின் உயிருடன் விளையாடுகிறோம் என்ற எண்ணமின்றி அரசு செயல்படுகிறது.
அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்படவில்லை. நாடு முழுவதும் 20 நகரங்களில் 144 தடை உத்தரவு போட்டுள்ளனர். தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க 2 நாள் அவகாசம் அளித்து 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராது என்றார். தற்போது அமைச்சர் மது குடித்தால் கொரோனா வராது என்கிறார். தாங்கள் வகிக்கும் பொறுப்பை உணராமல் உளறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.