செய்திகள்
கோப்பு படம்

வில்லியனூர் அருகே காங்கிரஸ்-பாரதிய ஜனதா மோதல்: 4 பேர் கைது

Published On 2020-03-17 16:26 IST   |   Update On 2020-03-17 16:26:00 IST
வில்லியனூர் அருகே காங்கிரஸ்-பாரதிய ஜனதாவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா பிரமுகர் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் பொது இடத்தில் சுவர் விளம்பரம் செய்தனர்.

இந்த சுவர் விளம்பரத்தின் மீது அதே பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் வில்லியனூர் போலீசார் தலையிட்டு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், மணிகண்டன், நாகராஜன், நக்கீரன் ஆகிய 4 பேர் மீதும், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

காங்கிரசை சேர்ந்த ராஜேஷ், நாகராஜன், பாரதிய ஜனதாவை சேர்ந்த மைக்கேல், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் கூடப்பாக்கத்தில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News