தோஷ பரிகாரங்கள்

கோனியம்மன் கோவிலில் பூ போட்டு  உத்தரவு கேட்கும் பக்தர்கள்

Published On 2023-07-21 07:49 GMT   |   Update On 2023-07-21 07:49 GMT
  • நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
  • சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள்.

கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சியான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சயதார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பூ போட்டு  உத்தரவு கேட்கும் பக்தர்கள்

கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

Tags:    

Similar News