தோஷ பரிகாரங்கள்

மனிதர்களைத் தொடரும் கர்மவினைகளும்... அதற்கான பரிகாரங்களும்...

Update: 2022-09-29 08:36 GMT
  • கர்மவினைகள் நீங்க, சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கு தக்க பலனுண்டு.
  • கர்மவினைகளில் மூன்று வகைகள் உண்டு.

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கை. இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையும் மனம் துன்பம் ஏற்படும் போது தடுமாறுகிறது. இதன் வெளிப்பாட்டின் உச்ச கட்டமாக "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது" என பலவாறு புலம்புவதுண்டு. இது பலருடைய ஆதங்கம்.

தர்மசாஸ்திர நியதிப்படி ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும். ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் முற்பிறவியிலே செய்த பாவ, புண்ணியமாகும். அதை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான்.

அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர். ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து விடுகிறார்கள். வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச பார்க்கிறோம்.

ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடைய முடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். இதுதான் "ஜோதிட ரகசியம்".

தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும்.ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம் எனும் வினைப்பதிவு. இந்த தோஷம் உருவாகக் காரணம் பிறருடைய "கோபம்" மற்றும் "சாபம்" இதில் "கோபம்" என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை.

பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ஏமாந்தவர் ஏமாற்றியவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

"சாபம்" என்பது கோபத்தின் உச்சகட்டமாகும். சாபம் என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது தான் சாபம். அந்த கோபமோ சாபமோ நியாயமானதாகவோ நியாயமற்றதாகவோ இருக்கும்.

திரிகோண அதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோப, சாபத்தில் பெரிய நியாயம் இருக்காது. அது ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோப,சாபத்தில்நியாயம் இருக்கும். பாதிக்கப்பட்டவரின் இயலாமையின் வெளிப்பாடு மிகுதியாக இருக்கும். இது ஜாதகருக்கு மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

ஜோதிட ரீதியாக சனி, செவ்வாய் ராகு கேது, மாந்தி போன்ற கிரகங்களுடன் சம்பந்தம் பெறும் கிரகங்கள் ஒருவர் பெற்ற கோபம் மற்றும் சாபத்தின் விளைவுகளை உணர முடியும். ஒருவரின் கர்மாவை ராகு (தந்தை வழியிலும்), கேது (தாய் வழியிலும்), பனிரெண்டாம் அதிபதி சுட்டிக் காட்டும்.ஆறாம் வீட்டையும் குருவின் நிலையும் கொண்டு இந்த பிறவியில் எவ்வளவு தீர்க்கப்போகிறார் என்பதையும் அறியலாம்.ஒரு ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மா சொத்து, காமம், காசு என்ற மூன்று வழியாகவே உருவாகுகிறது.

இந்த மூன்றும் தந்தை, தாய் வழி கர்ம வினை மற்றும் முன் பிறப்பின் கர்ம வினை மூலமாக ஒரு ஆன்மாவினில் இயங்குகிறது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்ம வினை தாக்கத்தால் வருபவை.

இதை தீர்க்க பரிகாரம் உள்ளதா? என்பதே இந்த கட்டுரையின் சாராம்சம்.

கர்மவினைகள் நீங்க,சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எந்த வகையான கர்மவினை பாதிப்பு ஒருவர் ஜாதகத்தில் உள்ளது, எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும். மனிதர்களைத் தொடரும் கர்மவினைகளில் மூன்று வகைகள் உண்டு.அவை வருமாறு:-

1. த்ருத கர்மா

(தெரிந்தே செய்த பாவம்)

சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 போன்ற பாவகங்கள் மூலம் அனுபவிக்கும் தீர்க்க முடியாத கர்மாவாகும். பஞ்சமகா பாதகம் என சாஸ்திரங்களில் கூறப்பட்ட மிகக் கடுமையான, கொடூரமான பாவங்களின் வினைப்பதிவு. சென்ற பிறவியில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களான பிறர் சொத்தை அபகரித்து ஒருவரை துன்புறுத்துவது, கற்பழிப்பு, பணத்துக்காகக் கொலை, தாய் தந்தையரை பராமரிக்க தவறுவது, கணவன் மனைவிக்கு துரோகம் செய்வது, மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, பெற்ற பிள்ளையை முறையாக கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைப்பது, நம்பிக்கை துரோகம்போன்றவைகள் இதில் அடங்கும்.

அதாவது தெரிந்தே பாவங்களைத் தொடர்ந்து செய்வதால் அதற்கு மன்னிப்பே கிடையாது. இது போன்ற பாவங்களை செய்தவர்களின் குடும்பத்தில் முன்னோர் வழிபாடு செய்யும் வழக்கம் இருக்காது அல்லது முன்னோர்களை வழிபட்டால் ஏதாவது பிரச்சினை உருவாகும். இவர்களுக்கு குல தெய்வ வழிபாடும் இருக்காது. இவர்களுக்கு இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும் பலிக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. சுய ஜாதகத்தில் ராகு, மாந்தி, 9-ம் அதிபதியின் நிலையை வைத்தே இவர்களுக்கு தெளிவான தீர்க்கமான முடிவை சொல்ல முடியும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க இந்த ஜென்மத்தில் வாழும் காலம் வரை சுப பலனை அனுபவிக்க பித்ருக்கள் வழிபாடு, திலஹோமம், அன்னதானம் , சிவ வழிபாடு தொடர்ந்து செய்யவேண்டும்.

2. த்ருத அத்ருத கர்மா:

சுய ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 வலிமை பெற்ற ஜாதகம். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்த குற்றமாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு. அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜென்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இவர்கள் தங்கள் மனோவிருப்பங்கள் நிறைவேற சாந்தி மந்திரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சாந்தி மந்திரம் மிக வலிமையானது. ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், புகழ் இருந்தாலும், குடும்பத்தில், மனதில் நிம்மதி அமைதி இல்லாவிட்டால் பயனில்லை.விதிமுறைப்படி சாந்தி மந்திரம் பிரயோகித்தால் இல்லத்தில், மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யமுடியும். இவர்கள் பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்த பித்ருகளுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை முறைப்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும்.

அத்துடன் தனது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம், அதீத கோபம், அதீத பேராசை போன்றவற்றை கைவிட வேண்டும். அதன் பிறகு கீழ்காணும் சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வந்தால் நன்மை உண்டாகும்.

ஓம் சக நாவவது சக நவ் புனக்து சக வீர்யம்

கரவாவகை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவகை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

3. அத்ருத கர்மா:

சுய ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் முழுமையயாக பலன்தர கூடிய அமைப்பில் இருக்கும். முன்னோர்கள் நல்லாசி, குல தெய்வகடாட்சம் நிரம்பியவர்கள். மிகவும் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் தெரியாமல் செய்வது. போன்ற வினைகள் இவர்களுடைய பதிவில் இருக்கும். இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதே போதுமானது. இந்த வகை ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.

ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ வைக்கும் முயற்சியாகவே நம் முன்னோர்கள் ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள். தவறு செய்வது மனித இயல்பு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் "என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை" என்பதையே கூறுகிறார்கள்.இதற்கு தான் செய்வது தவறு என்ற அறியாமையும் ஒரு காரணம். தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன் தராது. சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் எனும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் சரணாகதி அடைந்து இறைவனின் அருட் கருணையால் கர்ம வினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.

முன் வினைகளின் விளைவுகள் தான் மனிதர்களை துரத்திக் கொண்டே வருகின்றன. மனிதன் முக்தி அடைவதற்கும் பிறவாப் பெருநிலை அடைவதற்கும் சஞ்சித கர்மா முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது முடியாத காரியம். சரணாகதி எனும் வழிபாடே சஞ்சித கர்மாமிற்கு முற்று புள்ளி வைக்க பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட அருட்கொடை.

அது போலத்தான் கடந்தகால 'கர்மாவை' ஒட்டியே, தற்போதைய வாழ்வும் அமைந்து விடும். அதனால் நமது செயல்கள் நன்மையை விளைவிப்பதாக இருக்க வேண்டும். நன்மையை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு, முதலில் இறைவன் மேல் அன்பைச் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பாவச் செயல்களை செய்வதற்கு பயப்பட வேண்டும். இறுதியாக நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.

இந்த மூன்றையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும். கடவுளின் மீதான அன்பு , பாவச் செயல்களைத் தவிர்த்தல்-ஒழுக்கம், இவை மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைகள். இவைகளைக் கடைப்பிடிப்பதற்கு, இறைவனின் மீதான பக்தியே உதவி செய்யும்.கால சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் விதிப்பயனை மீறி சில திட்டமிடுதலை செய்து வெற்றி பெற சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால் பரிபூரண பலன் கிடைக்கும். அந்த வகையில் அன்றாட வாழ்வில் அநேகர் சந்திக்கும் முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிட்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News