சினிமா செய்திகள்

'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'.. தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சரத்பாபு

Published On 2023-05-22 17:16 IST   |   Update On 2023-05-22 17:16:00 IST
  • 1977 ஆண்டு பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சரத்பாபு.
  • நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் சரத்பாபு இணைந்து நடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்பாபு, ஜூலை 31ம் தேதி, 1951 ஆண்டு பிறந்தார். சத்யம் பாபு தீட்சிதுலு என்ற தனது பெயரை திரையுலகிற்காக சரத்பாபு என்று மாற்றிக் கொண்டார். இவர் 1973 ஆம் ஆண்டு ராமராஜ்யம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.



அதன்பின்னர் 1977 ஆண்டு தமிழில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முடி சூடா மன்னன், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.



முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலின் மூலம் சரத்பாபு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை அறியப்பட்டு கொண்டிருக்கிறார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு, நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.



இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழி படங்களில் நடித்து கவனம் பெற்றார். 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு, கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2023ம் ஆண்டு தமிழில் பாபி சிம்ஹா, காஷ்மிரா பர்தேசி நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார்.



சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக ஏப்ரல் 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மறைந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் சரத்பாபு நலமுடன் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டது.



தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி அனைவரையும் கவர்ந்து வந்த சரத்பாபுவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரத்பாபு இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது கலைப்பணியால் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Tags:    

Similar News