சினிமா செய்திகள்

சத்ய நாராயணா - நரேந்திர மோடி

நடிகர் சத்திய நாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-12-23 11:27 GMT   |   Update On 2022-12-23 11:27 GMT
  • 1959-ம் ஆண்டு சிப்பாய் கூந்துரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சத்யநாராயணா.
  • உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்திய நாராயணா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கவுதாரம் பகுதியை சேர்ந்தவர் சத்ய நாராயணா (வயது 87). கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த இவர், விஜயவாடாவில் கல்லூரி படிப்பை முடித்தார். சத்திய நாராயணா 1959-ம் ஆண்டு சிப்பாய் கூந்துரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2019-ல் கடைசியாக 'மகரிஷி' படத்தில் நடித்து இருந்தார்.

சத்ய நாராயணா

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மசூலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றி பெற்றார். சிறந்த நடிகருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது பெற்று உள்ளார்.

ராமா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி குடமா சிங்கம் பங்காரு குடும்பம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்திய நாராயணா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் ஹைதராபாத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சத்ய நாராயணா

இந்நிலையில், சத்ய நாராயணா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிரபல திரைப்பட ஆளுமை கைகலா சத்தியநாராயணா மறைவால் வேதனையடைந்தேன். பல்வேறு கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்புத்திறமையாலும் தலைமுறைகளை கடந்து நன்கு அறியப்பட்டவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News