சினிமா செய்திகள்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2023-05-18 10:06 GMT   |   Update On 2023-05-18 10:06 GMT
  • தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
  • தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.

புதுடெல்லி:

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்துவந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது. விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், படம் திரையிடும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News