சென்னையில் சாலை விபத்து ஒன்றில் வேன் முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதித்ய மாதவன், இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிஷ் காந்த் ஆகியோர் விசாரணையில் ஈடுபடுகின்றனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. இதனிடையே நாயகி கவுரி கிஷன் டாக்டராக பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை கண்டுபிடிக்க கவுரி கிஷன் முயற்சி செய்கிறார்.
இறுதியில் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு வந்த பிரச்சினை என்ன? கவுரி கிஷன் அதை கண்டுபிடித்தாரா? வேன் விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை போலீஸ் அதிகாரியான ஆதித்ய மாதவன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித்ய மாதவன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக காட்சியில் ஸ்கோர் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி கவுரி கிஷன் ஒரு டாக்டராக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது, மருத்துவமனையில் இருக்கும் பிரச்சனையை கண்டுபிடிக்க முயற்சி செய்வது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் அஞ்சு குரியன் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடை உடையுடன் அசத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்து இருக்கிறார். மேலும் முனீஷ் காந்த், ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இயக்கம்
மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன். படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். காதல், ஆக்ஷன், காமெடி, மருத்துவமனையில் நடக்கும் மாபியா, திரு நம்பியின் பிரச்சனை என திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார். அதர்ஸ் என்கிற தலைப்பின் காரணத்தை படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைத்து இருப்பது சிறப்பு.
இசை
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
அதேபோல் அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கதையோடு அற்புதமாக பயணித்துள்ளது.