சினிமா செய்திகள்

JAAT திரைப்பட சர்ச்சை.. நடிகர் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா, இயக்குநர் மீது பாய்ந்தது FIR

Published On 2025-04-18 12:56 IST   |   Update On 2025-04-18 12:56:00 IST
  • இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தாக சர்ச்சை எழுந்தது.
  • ஈஸ்டர் பண்டிகையின் போது இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் வேண்டுமென்றே இந்தப் படத்தை வெளியிட்டனர்

தெலுங்கு இயக்குநர் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்த இந்தப் படம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.32 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த படத்தில் கிறிஸ்தவ மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா மற்றும் வினீத் குமார் சிங் மற்றும் படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி, தயாரிப்பாளர்கள் மீதும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 299 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மத உணர்வுகளை சீர்குலைக்கும் செயல்கள்) இன் கீழ் பஞ்சாப், ஜலந்தர் காவல்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

படத்தின் ஒரு காட்சி, "முழு கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது" என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கிறிஸ்தவர்கள் கோபப்படவும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கவும், அமைதியின்மை பரவவும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின் போது இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் வேண்டுமென்றே இந்தப் படத்தை வெளியிட்டனர்" என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News