சினிமா செய்திகள்

நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை- நடிகை பார்வதி

Published On 2024-08-06 19:56 IST   |   Update On 2024-08-06 19:56:00 IST
  • இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
  • 'தங்கலான்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல.

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் நடிகை பார்வதி பேசியதாவது:-

ஜீ. வி. பிரகாஷ் இந்த படத்திற்காக வழங்கிய இசை, ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், மிகப்பெரிய வெற்றி படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்த படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு இந்த படத்தில் நனவானது. அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன். கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தேன். ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.

அவர் உருவாக்கிய கங்கம்மா என்ற கதாபாத்திரம் மட்டுமல்ல அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் கங்கம்மாவாக வாழ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் - மீது பேரன்பு கொண்டவர் சீயான் விக்ரம். நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும். இதற்காக விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும் போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் என்னுடைய வாரிசுகளாக நடித்த நடிகர்களுடன் ஒரு குழுவாகத் தான் இருப்போம்.

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம். நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும் அது அரசியல். அந்த வகையில் 'தங்கலான்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம், விடுதலை பற்றி நிறைய பேசுகிறோம். இதனை தொடர்ந்து பேச வேண்டும். பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்று குறித்தும் பேச வேண்டும். இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல். கலை என்பதும் அரசியல். .இதற்காக ரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி'' என்றார்.

Tags:    

Similar News

வடம்- Movie Review