சினிமா

மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை

Published On 2018-11-08 11:10 GMT   |   Update On 2018-11-08 11:10 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளார்கள். #MarinaPuratchi
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது.

தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளனர்.

மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி கோர்ட்டுக்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2-வது மறு சீரமைப்பு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க உறுதியுடன் இருக்கிறோம் என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News