சினிமா

ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்

Published On 2018-05-25 08:09 GMT   |   Update On 2018-05-25 08:09 GMT
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்களுள் ஒருவரான நடிகர் சதீஷ் தனக்கு ஹீரோவாகும் தைரியம் இல்லை என்றும், வில்லனாக நடிப்பதாகவும் கூறினார். #Sathish
இது காமெடியன்கள் ஹீரோவாக களம் இறங்கும் காலம். ஆனால் வித்தியாசமாக தமிழ்படம் 2-ல் மெயின் வில்லனாக மாறி இருக்கிறார் சதீஷ். பூமராங் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி பேசினோம்.

’நான் அறிமுகம் ஆனதே தமிழ் படம் பாகம் 1 இல் தான். தமிழ் படம் 2 முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும். இதில் நான் வில்லனாக கதாபாத்திர உயர்வு பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனக்கு 15 கெட்டப்கள். நான் சீரியஸாக பேசும் வசனங்களுக்கு எல்லாம் மக்கள் கைதட்டி சிரித்து ரசிப்பார்கள். எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.

நீங்கள் எப்போது ஹீரோ ஆகப் போகிறீர்கள்?

அந்த கஷ்டத்தை மக்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. எல்லா காமெடியன்களும் ஹீரோ ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்தானத்தை எடுத்துக்கொண்டால் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார். டான்ஸ் கற்றுக்கொண்டார். தன்னை ஹீரோவாக மாற்றிக்கொண்டு உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை.



இப்போது வரும் படங்களில் டிராக் காமெடி வழக்கொழிந்து விட்டதே?

இது சாதகமா? பாதகமா? என்பதை விட எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் எவ்வளவு சின்ன இடம் கொடுத்தாலும் அதிலும் நான் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். டிராக் காமெடியில் உள்ள வசதி நமக்கான பகுதிகளை தனியாக நடித்துக்கொடுத்துவிடலாம். விரைவாக முடிந்துவிடும். ஆனால் டிராக் அல்லாத காமெடி என்றால் படம் முழுக்க இருக்க வேண்டும். சந்தானத்துக்கு பின் தான் இந்த முறை வந்தது என நினைக்கிறேன். ஹீரோவுடனே பயணிக்கும்போது பாடல், சண்டை காட்சிகளில் கூட தோன்றலாம். நமக்கு தரப்பட்ட ஆடுகளத்தில் நம் திறமையை காட்ட வேண்டும்.

அடுத்து எம்.ராஜேஷ் படம். அவர் காமெடியன்களுக்கு முக்கியத்துவம் தருபவராயிற்றே?

ராஜேஷை பொறுத்தவரை நாம் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. அவர் சொன்னதை செய்தால் போதும். சுந்தர்.சி படம் எப்படியோ அப்படித்தான் ராஜேஷ் படமும். இருவருக்குமே இயல்பிலேயே காமெடி வரும். அது அப்படியே படத்தில் வரும் கதாபாத்திரங்களிலும் எதிரொலிக்கும்.

வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் நல்ல செய்தி வரும். #Sathish
Tags:    

Similar News