தனுசு - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

Published On 2023-10-04 09:44 IST   |   Update On 2023-10-04 09:46:00 IST
தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகு-கேது இருவரும் இந்த இடங்களில் சஞ்சரித்து, நட்சத்திரப் பாதசாரங்களுக்கேற்ப பலன்களை வழங்கப் போகிறார்கள்.

உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு ராகு பகவான் வரும்போது, 'அர்த்தாஷ்டம ராகு'வாக வருவதால், ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி தலைதூக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் பங்குதாரர்கள் விலக நேரிடலாம். புதிய பங்குதாரர்களை ஆராய்ந்து சேர்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் ஒரு சிலர் மாற்றங்களைச் செய்ய விரும்புவீர்கள். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

குரு மற்றும் சனி வக்ர காலம்

8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த குரு வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். யாருக்கேனும் பணப்பொறுப்பு சொல்வதென்றால் யோசித்துச் சொல்லுங்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகளை பிறரிடம் கொடுக்க வேண்டாம். பொருளாதாரம் சீராகும்.

8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் சகோதர பாசம் குறையும். உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் வரும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி குறையாமலும், பகை உருவாகாமலும் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம்.

சனிப்பெயர்ச்சி காலம்

20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். உங்களுக்கு ஏழரைச் சனி முழுமையாக விலகுகிறது. எனவே தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு விலகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வீடு, இடம் வாங்கும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

குருப்பெயர்ச்சி காலம்

1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்திற்கு வருவது யோகம்தான். அதே நேரம் ராசிநாதன் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது கடன் சுமையும், கவலையும் அதிகரிக்கும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்குப் போதுமான ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். சம்பள உயர்வு உண்டு. கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க புரிந்து நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளாலும், பிறராலும் பிரச்சினை உருவாகும். யாரையும் நம்பி எதையும் செய்ய முடியாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் பணி இடமாற்றம் திருப்தி தராது.

வளர்ச்சி தரும் வழிபாடு

4-ம் இடத்து ராகுவால் நன்மை கிடைக்கவும், 10-ம் இடத்து கேதுவால் தொழில் வளம் பெருகவும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்துகொள்ளுங்கள்.

Similar News