search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பெருமாள் 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    • விடிய விடிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.

    குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள் அதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் அளித்தார். எதிர்சேவையில் தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவிலில் தங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடான பெருமாள் கிழக்கு ரத வீதி, தெற்குத் தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியாக வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் மஹாலுக்கு வந்தடைந்தார்.

    அங்கு சவுராஷ்டிர மகாஜன சபையினரின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் பெருமாள் மச்ச அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி என 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங்களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளின் திரு அவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் பெருமாள் தாடிக்கொம்பு சென்றடைகிறார்.

    • மவுன யோக நிலையில் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    • குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் ஆகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது.

    ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது.

    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.

    இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

     மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர்.

    முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

    சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

    குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறியருளினார்.

    குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

    நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து 'தென் திருக்கயிலாயம்' என்றும், 'பூவுலகின் கயிலை' என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

    ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

    மேற்கு திசை நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு மவுன யோக நிலையில்  இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவும், தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவ வலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர், தென்திசை நோக்கிதான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

    வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    • நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.
    • தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி, தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

    இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.

    திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

    இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர்களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடைபெற அருள் பாலித்தார். இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

    கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

    இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

    • தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது.
    • தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் - அம்பாள் சாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தெப்ப தேர் விழாவை காண குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்ப குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.

    • நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி.
    • திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    பிரதோஷம் என்றால் மாலையில் சூரிய அஸ்தமன வேளையான மூன்றே முக்கால் நாழிகைகளை (4.30 மணி முதல் 6 மணி வரை) குறிக்கும். இந்த நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. எனவே குறைந்தபட்சம் மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    ஈசன் ஆலகால விஷத்தை உண்டு மயக்கம் தீர்ந்து எழுந்து நந்தியின் கொம்புகளுக்கு நடுவே கால்பதித்து நடனமாடிய நேரம் பிரதோஷ வேளை, திரயோதசி திதி. ஈசனின் நடனம் கண்டபின் தேவர்களின் மன பயம் நீங்கியது.

    மகிழ்ச்சி பிறந்தது. அதன்பின்னரே அவர்களுக்கு அமிர்தம் கிடைத்து சாகா வரம் பெற்றனர். எனவே, பிரதோஷ வேளையில் ஈசனை தரிசனம் செய்பவர்களுக்கும் பயம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினத்தன்று மாலையில் சிவாலயத்தில் கூடும் கூட்டமே இதற்கு சான்று.

    சோமசூக்த வலம்

    மாதம் இருமுறை வரும் பிரதோஷ நாள்களில் வழிபட முடியாதவர்கள் ஓர் ஆண்டில் அபூர்வமாக வரும் சனிக் கிழமை பிரதோஷத்தன்று வழிபாடு செய்வது அவசியம். ஒரு சனிப்பிர தோஷத்தன்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அதனால்தான் அதை பிரதோஷங்களின் தலைவன் என்னும் விதமாக மகாபிரதோஷம் என்று அழைக்கிறார்கள்.

    மகாபிரதோஷத்தின் விசேஷம்

    முதன்முதலில் ஈசன் பிரதோஷ வேளையில் ஆனந்த நடனமிட்டது ஒரு சனிக் கிழமையில்தான். சனிப்பிரதோஷ வேளையில் சகல தேவர்களும் ஈசனின் சன்னிதியில்தான் கூடியிருப்பார்கள். ஈசனை தேவர்களும் வழிபாடு செய்வார்கள் என்பதால் அந்த வேளையில் ஈசனும் அவரின் வாகனமான நந்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அப்போது கேட்கும் வரங்களை எல்லாம் ஈசன் அருள்வார் என்கின்றன ஞான நூல்கள்.

    நந்தியே இந்தப் பிரபஞ்சத்தின் முதல் சீடன், முதல் குரு. ஈசனிடம் பிரபஞ்ச ரகசியங்களைக் கற்ற சீடனான நந்தி, பிரபஞ்சத்துக்கே குருவாகவும் திகழ்கிறார். இந்த உலகில் குருவின் கருணையைப் பெறாமல் ஈசனின் திருவடியைச் சரணடைய முடியாது.

    எனவே உயிர்கள் அனைத்தும் சிவனைச் சரணடைய வகை செய்து அருள் செய்பவர் நந்தி பகவான். மண்ணுலகின் ஒவ்வொருவருக்கான குருவை அடையாளம் காட்டி வழி நடத்துபவர். அப்படி ஒரு ஞான குரு அமையப் பெறாதவர்கள் இந்த மகாபிரதோஷ வேளையில் நந்தியிடம் வேண்டிக்கொண்டால் விரைவில் உங்களுக்கு ஞான குரு கிடைப்பார். சிவ நெறியில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.

    மேலும் காரியத்தடை நீங்குதல், கடன் தீர்ந்து செல்வ வளம் சேர்தல், பகை அழிந்து வெற்றிகள் குவிதல் என இந்த உலகில் நாம் மகிழ்வோடு வாழத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளும் வழிபாடு மகா பிரதோஷ வழிபாடு.

    மகா பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம் மிகவும் முக்கியம். ஈசன் ஆனந்த நடனம் புரியும் தன்மையில் அருள்வார். தவறாமல் கோவிலுக்குச் சென்று நந்திக்குப் பின் நின்று அதன் கொம்புகளின் வழியாக ஈசனை தரிசனம் செய்ய வேண்டும்.

    ஆலயம் செல்லும்போது குறைந்தபட்சம் கையில் மலர்களோ, வில்வ இலைகளோ கொண்டு செல்லுங்கள். ஏக வில்வம் சிவார்ப்பணம் என்பது பெரியவர்கள் வாக்கு. பக்தியோடு ஒரு வில்வ இலை சமர்ப்பித்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து கேட்கும் வரம் தருவார்.

    வாய்ப்பிருப்பவர்கள் நந்தியின் அபிஷேகத்துக்கு உரிய பொருள்களை சமர்ப்பிக்கலாம். பசும்பால் மிகவும் சிறந்தது. நெய், தேன், சந்தனம், மஞ்சள் சமர்ப்பணம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.

    தவறாமல் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. மகா பிரதோஷ காலத்தில் ஒருமுறை பாராயணம் செய்தாலே பலநூறுமுறை பாராயணம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.

    பிரதோஷ வேளையில் ஆலயத்தில் சோமசூக்த பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதாவது நந்திக்குப் பின் இருந்து சிவனை தரிசனம் செய்துவிட்டுப் பின் பிரதட்சிணமாகக் கோமுகி வரை வலம் வர வேண்டும். பின் கோமுகியைக் கடக்காமல் இடமிருந்து வலமாகத் திரும்பி சுற்றிவர வேண்டும். இவ்வாறு சிவநாமத்தைச் சொல்லியபடி வலம் வந்து வேண்டிக்கொண்டால் மனதின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும். வாழ்வில் இருந்த துக்கங்கள் நீங்கும்.

    ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ வேளையில் விளக்கேற்றி சிவபுராணமும், கோளறு பதிகமும் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வமும் உணவும் நிறைந்திருக்கும். அந்த வேளையில் வீட்டில் செய்யக் கூடாத சிலவற்றை அறிந்து தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக பிரதோஷ வேளையில் உறங்கக் கூடாது. அதிலும் சனி மகாபிரதோஷ வேளையில் உறங்குவது பாவம். இரவு வேலை செய்பவராக இருந்தால் கூட இந்த வேளையில் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருந்து சிவ தியானம் செய்தாலே புண்ணியம் என்கிறார்கள்.

    வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. பிற தீய பழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. தீய சொற்களைப் பேசக் கூடாது. நற்செயல்கள் செய்பவர்களை பழித்துப் பேசித் தடுக்கக் கூடாது என்கின்றன ஞான நூல்கள்.

    சனி தோஷம் தீர்க்கும் சனிப்பிரதோஷம்

    சனிக்கிழமை சனி பகவானுக்குரியது. இந்த நாளில் செய்யும் சிவ வழிபாடு சனி பகவானின் அருட்பார்வையைப் பெற்றுத்தரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனிப்பிரதோஷம் அற்புதமான பரிகார தினமாகும்.

    இந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் முற்றிலும் விலகும். சகல நன்மைகளும் கைகூடும். எனவே இந்த நாளில் தவறாமல் சிவ வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • வடமாநிலத்தில் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று.
    • ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

    வடமாநிலத்தில் வழிபடும் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 5,200 அடி உயரத்திலும், கத்ராவின் திரிகுடா மலைத்தொடரின் மேல் 1,700 மீட்டர் உயரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் குகைக் கோவிலாக இது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அருளும் வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அடுத்து, அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது.

     தல வரலாறு

    ஜஸ்துமல் என்னும் தேவி உபசாகருக்கு, வைஷ்ணவி தேவியே மகளாக பிறந்தாள். அழகும் அறிவும் கொண்டு வளர்ந்த வைஷ்ணவி தேவி, மங்கைப்பருவம் எய்தினாள். அவளது அழகில் மயங்கிய பைரவன் என்னும் அசுரன், அவளைத் துரத்தினான். அசுரனிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஓடிய வைஷ்ணவி தேவி, ஒரு குகையில் போய் ஒளிந்துகொண்டாள். அங்கே அவளுடைய சுய சொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட்டது. இதையடுத்து அந்த அன்னையானவள், குகைக்கு வெளியே வந்து அந்த அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள்.

    வைஷ்ணவி தேவி, அசுரனின் தலையை வெட்டியபோது, அவன் உடல் குகையின் வாசலிலும், பைரவகாடி அருகில் உள்ள மலையில் அவனது தலையும் விழுந்தது. அந்த அசுரன் இறக்கும் தருவாயில் தன் தவறை உணர்ந்து, வைஷ்ணவி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அதைக் கேட்டு மனம் இரங்கிய அன்னை, "பிற்காலத்தில் இந்தக் குகைக் கோவிலை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு, நீ முக்தியை பெறுவாய்" என்று வரமளித்தாள்.

    இன்றும் குகை கோவிலுக்கு வரும் பக்தர்கள், திரும்பிச் செல்லும்போது, பைரவகாடிக்குச் சென்று அந்த அசுரனையும் வழிபட்டுச் செல்கிறார்கள். அன்று வைஷ்ணவி தேவி அசுரனுக்கு அஞ்சி ஒளிந் திருந்த குகையே, இன்று வைஷ்ணவி தேவி கோவிலாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் வைஷ்ணவி தேவிக்கு சிலை வடிவம் இல்லை. அன்னை இங்கு அரூபமாக இருந்து அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயம் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இங்குள்ள கருவறையில், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தலத்துக்கு வருபவர்கள் முதலில் ஜம்முவுக்கு வந்து, அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கட்ரா என்னும் சிறிய ஊருக்குள் வரவேண்டும். அங்கு வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க பதிவு செய்துகொள்ள வேண்டும். குழுவாகவோ, தனி நபராகவோ நமது விவரங்களைக் கொடுத்தால் இலவச தரிசன டிக்கெட்டுகளை அங்கிருக்கும் வைஷ்ணோதேவி போர்டு வழங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் இருந்தால் தான் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மலைப்பாதையில் நடக்க இயலாதவர்கள், குதிரை அல்லது டோலி மூலமாக செல்லவும் வசதிகள் உள்ளன. பக்தர்கள் 'ஜெய் மாதா' என்ற கோஷத்துடன் மலைப்பாதையில் நடந்து சென்று வைஷ்ணவி தேவியை தரிசிக்கிறார்கள். மலைப் பாதை தொடங்கத்தில் உள்ள பாண்கங்கா என்ற நதியில் முதலில் நீராட வேண்டும்.

    இந்த நதியானது, வைஷ்ணவி தேவி தொடுத்த பாணத்தால் உருவானதாக சொல்கிறார்கள். அங்கிருந்து சரண்பாதுகா என்ற இடத்தை அடையலாம். இது வைஷ்ணவி தேவி இளைப்பாறிய இடம். மொத்தம் 12 கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில், முதல் 10 கிலோமீட்டர் தூரம் ஏற்றமாகவும், அடுத்த 2 கிலோமீட்டர் தூரம் இறக்கமாவும் அமைந்திருக்கிறது.

    இந்த 12 கிலோமீட்டர்களையும் கடக்கும்போது, பக்தர்கள் மிகுந்த களைப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக வழியில் ஜூஸ், காபி கடைகளும், அவசரத்துக்கு உதவ மருந்துக் கடைகளும் இருக்கின்றன.

    செல்லும் வழியில் குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்கிரகத்தை தரிசித்து பின்னர் பயணத்தைத் தொடரவேண்டும். தேவியை தரிசிப்பதற்கு சுமார் 1 கிலோமீட்டருக்கு முன்பு பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். குகைக் கோவிலை அடைந்தவுடன் கர்ப்பக்கிரகம் உள்ளது. அதன் உள்ளே இடதுபுறம் சரஸ்வதி தேவியும், வலது புறம் துர்க்கையும், நடுவில் மகாலட்சுமியும் உள்ளனர். இந்த மூன்று சக்திகளின் உருவமே வைஷ்ணவி தேவி என்று சொல்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் உள்ள வைஷ்ணவி தேவியிடம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    தேவியை தரிசித்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக நாணயங்களைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுவந்து வீட்டில் வைத்தால் எதிரிகள் பயம் விலகும். அச்சம் நீங்கும். செல்வம் நிலைக்கும் என்கிறார்கள்.

     

    • கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.

    மதுரை:

    சித்திரையில் முத்திரை பதிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடை பெற்றது. முத்தாய்ப்பாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக் கல்யாணமும், 22-ந் தேதி தேரோட்டமும் நடந்தது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வரும் நிலையில் கள்ளழகர் கோவில் சித்தி ரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகடப்படிகளில் எழுந்தருளி கள்ளழகர் அருள்பாலித்தார்.

    மறுநாள் 22-ந் தேதி புதூரில் வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவி லில் கள்ளழகர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. 23-ந் தேதி அதிகாலை கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி காலை 6 மணி யளவில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு முழுவதும் அங்கு திருவிழா களைகட்டியது.

    24-ந் தேதி காலை சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனி வருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார கோலத்தில் கள்ளழகர் காட்சி அளித்தார்.

    நேற்று (25-ந் தேதி) காலை மோகினி அலங் காரத்தில் பக்தி உலா நடந்தது. பின்னர் ராஜாங்க அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர் தடம் பார்க்கு நிகழ்வுக்காக மீண்டும் வைகையாற்று பகுதியில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வந்த கள்ளழகருக்கு திருமஞ்ச னம் நடந்தது. இன்று அதி காலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பாடானார்.

    காலையில் மூன்று மாவடி, ரேஸ் கோர்ஸ், தாமரை தொட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது சர்க்கரை தீபம்ஏந்தி வழி பட்டனர்.

    வழிநெடுகிலும் மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு களித்தனர்.

    இன்று இரவு அப்பன் திருப்பதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு விடிய, விடிய நடக்கும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்பார்கள். பின்னர் நாளை (26-ந் தேதி) காலையில் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலையை சென்றைடைவார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கிறது.

    ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர்.

    நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடக்கிறது. இதனால் தான் ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று பார்க்கலாம்?

    குருவிடம் ஜோதிடம் கற்ற சந்திரன்:

    ஜோதிட சாஸ்திரத்தின் குருவான பிரகஸ்பதியிடம் சந்திர பகவான் தெய்வீக தன்மைகள், சாஸ்திரங்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காக மாணவனாக சேர்ந்துள்ளார். குரு பகவானும் தனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கலைகளையும் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

    தனது குருவான குரு பகவானிடம் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட சந்திரனுக்கு தான் என்ற ஆணவம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இதையறிந்த குரு பகவான் அவரது ஆவணத்தை அடக்க முடிவு செய்தார்.

    இதனால், பூமியில் புதியதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒன்றை கணிக்கும்படி சந்திர பகவானுக்கு கூறியுள்ளார். சந்திர பகவானும் தான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துள்ளார். அதில், அந்த குழந்தை ஒரு வயது வரை மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும், ஒரு வயது பூர்த்தியடையும் போது பாம்பு கடித்து உயிரை விடும் என்றும் கணித்து எழுதியுள்ளார்.

    இதையடுத்து, சரியாக அந்த குழந்தையின் முதல் வயது பூர்த்தியடையும் போது என்ன நடக்கிறது? என்பதை பார்க்க குரு பகவானும், சந்திரனும் விண்ணுலகில் இருந்து பார்த்தனர். அப்போது, சந்திரன் கணித்தது போலவே அந்த குழந்தையின் ஒரு வயது பூர்த்தியடைய சில நிமிடங்களே இருந்த சூழலில், அந்த குழந்தை படுத்திருந்த தொட்டியின் மீது பாம்பு ஒன்று வந்தது.

    இதைக்கண்ட சந்திரனுக்கு தான் கணித்தது போலவே நடக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. குரு பகவானும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டிலில் இருந்த குழந்தை தன்னை நோக்கி வரும் பாம்பை ஒரு விளையாட்டு பொருளாக நினைத்து துள்ளிக்குதித்தது. இதனால், தொட்டில் ஆடியது.

    அப்போது பாம்பின் தலை தொட்டிலின் சங்கிலியில் சிக்கிக் கொண்டது. சங்கிலியில் சிக்கிக் கொண்ட பாம்பு அதில் இருந்து தப்பிக்க தனது உடலை முன்னும், பின்னும் அசைத்தது.

    இதைப்பார்த்த குழந்தை இன்னும் உற்சாகமாக தொட்டிலில் துள்ளிக்குதித்தது. இதனால், பாம்பின் வால் உள்பட பின்பகுதியும் தொட்டிலில் மறுமுனை சங்கிலியில் சிக்கிக்கொண்டது. குழந்தை துள்ளிக்குதிக்கவும், தொட்டில் சங்கிலி இறுகவும் பாம்பு உடல் நசுங்கி உயிரிழந்தது.

    இதைக்கண்ட சந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான். சந்திரனின் கணிப்புப்படி, பாம்பு கடித்து குழந்தையே உயிரிழக்க வேண்டும். ஆனால், சங்கிலியில் சிக்கி பாம்பு உயிரிழந்தது. இதனால், தன்னுடைய கணிப்பை சந்திரன் சரிபார்க்கத் தொடங்கினான். சந்திரனின் கணிப்பு மிகச்சரியாகவே இருந்தது.

    இதையடுத்து, குரு பகவானிடம் தனது கணிப்பில் எந்த தவறும் இல்லையே? பின் எப்படி குழந்தை உயிர் பிழைத்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குரு பகவான் உனது கணிப்பில் தவறு இல்லை. ஆனால், குரு பகவானாகிய எனது பார்வை இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என்று விளக்கம் அளித்தார்.

    மேலும், சந்திரனிடம் உனது ஜாதக கணிப்பு தவறு இல்லை என்றும், அதனால் உனக்கு வந்த ஆணவமே தவறு என்று கூறியுள்ளார்.

    தலைக்கணம் நீங்கிய சந்திரன், குரு பார்வையின் மகிமையையும் புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று உண்டாகியதாக புராணங்கள் கூறுகிறது.

    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 13 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை காலை 7.26 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 3.01 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்த, மரண யோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. ஸ்ரீசென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கடமை

    சிம்மம்-கண்ணியம்

    கன்னி-கட்டுப்பாடு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- ஜெயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பாசம்

    • 1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் 46 -ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு. ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1008 கிலோ குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் செங்குன்றம், பாடிய நல்லூர், புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து குங்குமம் மற்றும் பிரசாதங்களை பெற்று சென்றனர்.

    ஆலய தர்மகர்த்தா ஆர். ராஜா சுவாமிகள் கூறுகையில், பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அஷ்ட காளி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கணபதி ஓமம் மற்றும் கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக மங்கள சண்டிஹோமமும், அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். பால்குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி சிரசில் ஏந்திய வண்ணம் ஆலமரம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடையும்.

    அதனைத் தொடர்ந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி பவனி வருதல், அம்பாளுக்கு பூச்சோரல் விழா, அக்னி கப்பறை கரத்தில் ஏந்திய வண்ணம் வீதி உலா, அம்பாளுக்கு தூப தீப ஆராதனைகளும் நடைபெறும்.

    அம்பாள் தனது அடியார்களுடன் தீ மிதித்தல் என்னும் பூக்குண்டத்தில் திருநடனம் புரிதல், மஞ்சள் நீராட்டு விழா, சுமங்கலி பூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஆகையால் பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
    • தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.

    நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலம்.
    • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், தந்தை சிவனுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதுமாகும். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலமும் இதுவே.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா... பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரானது அசைந்தாடியபடி 4 ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்று, காவிரியில் தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது.

    ×