என் மலர்tooltip icon

    செய்திகள்

    • உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக கார்ல்சென் பட்டத்தை வென்றார்.
    • உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

    தோகா:

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

    252 வீரர்கள் பங்கேற்ற ஓபன் பிரிவில் அனைத்து சுற்றுக்கள் முடிவில் அரை இறுதிக்கு கார்ல்சென் (நார்வே), அர்ஜுன் எர்கைசி (இந்தியா), பாபியானோ காருனே (அமெரிக்கா), நோடிர்பெக் அப்தசத்தோ ரோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றனர். இதில் அர்ஜுன் எரிகைசியை அப்துசத்தோரோவ்வும், காருனேவை கார்ல்சென்னும் தோற்கடித்தனர்.

    இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு கார்ல்சென், அப்துசத்தோரோவ் தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர். 4 சுற்றுக்கள் கொண்ட இறுதிச்சுற்றில் முதல் 3 ஆட்டங்களுக்கு பிறகு இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 4-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    அவர் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று பிளிட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கார்ல்சென், உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

    பிளிட்ஸ் போட்டியில் ஓபன் பிரிவில் 19 சுற்றுக்கள் முடிவில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் அவர் அரை இறுதியில் தோற்றார். இதனால் அவருக்கு வெண்கலபதக்கம் கிடைத்தது. ஏற்கனவே அவர் ரேபிட் பிரிவில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய ஆண் வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

    உலக பிளிட்ஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை பிபிசரா சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.

    நாளை (1-ந்தேதி) அரசு விடுமுறை என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதால் அனைத்து வகையான சரக்குகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை களை கட்டும் என்பதால் எல்லா கடைகளிலும் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை புத்தாண்டு விற்பனை அனல் பறக்கக்கூடும். பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கூடங்கள் நிரம்பி இருக்கும். சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான அளவு எல்லா கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும். புத்தாண்டில் கூடுதலாக ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.
    • கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 75). மறைந்த கிராமிய பாடகி பரவை முனியம்மாவின் நெருங்கிய தோழியான இவரும் பிரபல கிராமிய பாடகியாக வலம் வந்தார். இதனால் கோவில் திருவிழா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனது கணீர் குரலால் கிராமிய இசையில் தமிழ் மணக்க பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் லட்சுமி அம்மாள்.

    இந்த நிலையில் 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடல் பாடி லட்சுமி அம்மாள் நடித்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் பிரபலம் அடைந்த லட்சுமி அம்மாள் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாடி வந்தார்.

    பக்தி, கும்மிபாட்டு, தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி பாடல்களை மண்மனம் மாறாமல் கிராமிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு பாடிய இவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

    மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லட்சுமி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒருவழித் தடத்தில் நேற்று முடங்கியது. சென்ட்ரல்-கோயம்பேடு விமான நிலையம் நேரடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். சரி செய்யும் பணி இரவு வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து அந்த வழித்தடத்தில் சேவை தொடங்கியது.

    இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் (இன்டர்-காரிடார்) வரையிலான நேரடி ரெயில் சேவை மீண்டும் இயல்பான செயல்பாட்டை தொடங்கி உள்ளது.

    ப்ளூ லைனில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் டிப்போ வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும் வார நாள் அட்டவணையின்படி இயங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 800-க்கு விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதேபோல் வெள்ளி விலை கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31-ம், கிலோவுக்கு ரூ.31 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது இதுவரை இல்லாத உச்சமாக இருந்தது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? என்று புலம்பும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றுவிட்டது.

    கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம், வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.258-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-12-2025- ஒரு கிராம் ரூ.258

    29-12-2025- ஒரு கிராம் ரூ.281

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    • 2026-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயணங்களின் வெற்றி எதிர்கால மனித விண்வெளிப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும்.
    • எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமான விண்வெளி சோதனைகளுடன் முன்னேறி வருகிறது. 2025-ம் ஆண்டில் பல முக்கிய திட்டங்களை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, 2026-ம் ஆண்டிலும் பல அற்புதங்களை சாதிக்கத் தயாராகி வருகிறது. எனவே இந்த ஆண்டு இஸ்ரோவிற்கு மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது.

    இந்திய விண்வெளிப் பயணத்திற்கு ஒரு முக்கிய ஆண்டு 2025 நிறைவடையும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். 2026-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயணங்களின் வெற்றி எதிர்கால மனித விண்வெளிப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். அதனால்தான் இந்த ஆண்டை இஸ்ரோ மிகவும் முக்கியமானதாக கருதுகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    புத்தாண்டில் இஸ்ரோவின் மற்றொரு முக்கிய மைல்கல் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. தொடர்ந்து, இஸ்ரோவின் வடிவமைப்பின் அடிப்படையில் எச்.ஏ.எல் மற்றும் 'எல் அண்ட் டி'யால் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஓசோன்சாட்-3ஏ செயற்கைக்கோள் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்படுகிறது. நிலம் மற்றும் கடல் கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், வானிலை ஆய்வுகள் மற்றும் மீன்வளத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வருகிற 2027-ம் ஆண்டு 3 விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்துக்காக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் ஏவி பரிசோதனை செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது.

    இதற்கான முதல் ராக்கெட்டை புத்தாண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதில் வியோமித்ரா என்ற பெண் ரோபோவும் பயணிக்கிறது. இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பை முழுமையாக சோதிக்கும். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1எல்) என்ற வழி செலுத்தும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இவை முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.
    • இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல்-காசா போர், ஈரானின் அணுசக்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை குறிவைத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    இதனால் ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது ஈரான் அணுசக்தி திறன்களை கட்டமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அணுசக்தி திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கினால் அதனை முற்றிலும் அழித்து சின்னாபின்னமாக்கப்படும். பின்னர் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனவும் டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட முறை அவர் இதுபோல் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது தலையீட்டால் ரஷியா-உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தனது வீட்டை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிபர் புதினே தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் பேசினார்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது. அதற்கு ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும்.

    மேலும் இந்த போரின்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே அழிந்திருக்கும் என பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

    • சந்தீப் மிட்டல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
    • பிரேம் ஆனந்த் சின்ஹா தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

    தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.

    பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

    அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.

    செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.

    அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.

    அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நன்மைகள் நடைபெறும் நாள். தேகநலன் சீராகும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    சங்கடங்கள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

    மிதுனம்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

    கடகம்

    யோகமான நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துகொள்வீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. போன்மூலம் பொன்னான தகவலொன்று வந்து சேரும்.

    கன்னி

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    துலாம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

    விருச்சிகம்

    தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். வாங்கல் கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    மகரம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.

    கும்பம்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    மீனம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும்.

    • அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
    • ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

    2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

    புத்தாண்டுத் தொடக்கம் முதலே 'சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!' எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!

    உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-16 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி இரவு 11.16 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். நவநிதி மகாதீர்த்தம். ஸ்ரீரங்கம் கோவிலில் காயத்ரி மண்டபத்துக்குள் மூலஸ்தானத்தைச் சுற்றி திருவண்ணாழி பிரதட்சணம், நாச்சியார் திருக்கோலம். எம்பெருமான் தெப்பம். ஆவுடையார் கோவிலில் ஸ்ரீ மாணிக்கவாசர் எல்லாம்வல்ல சித்தராய் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை அரங்கநாதர் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமி பாலகர் ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூர் அமராவதி நதியின் வடகரையில் முத்தான சயனத்தில் அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிறப்பு

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-கண்ணியம்

    சிம்மம்-முயற்சி

    கன்னி-பயிற்சி

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-கடமை

    தனுசு- விவேகம்

    மகரம்-உண்மை

    கும்பம்-நட்பு

    மீனம்-நன்மை

    ×