Logo
சென்னை 23-04-2014 (புதன்கிழமை)
வாள் வீச்சில் புகழ் பெற்ற ரஞ்சன்: இந்திப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டினார்
"சந்திரலேகா" படத்தில் வரும் கத்திச்சண்டைக் காட்சியில் பிரமாதமாக நடித்த ரஞ்சன் அகில இந்தியப் புகழ் பெற்றார். இந்திப்பட உலகில் புகுந்து, வீரதீரச் செயல்கள் நிறைந்த படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
 
முதல் படம்
 
ரஞ்சனின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம். இயற்பெயர் வெங்கடரமண சர்மா.  1941-ம் ஆண்டு வெளிவந்த "ரிஷ்யசிருங்கர்" என்ற படத்தின் மூலம் ரஞ்சன் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.
 
அந்தப் படத்தில் ரஞ்சனின் ஜோடியாக நடித்தவர் வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தராதேவி. அடுத்து 1942-ல் "பக்த நாரதர்" படத்தில் நடித்தார். மங்கம்மா சபதம் 1943-ல் ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரித்த "மங்கம்மா சபதம்" படத்தின் மூலம் ரஞ்சன் பிரபலமானார்.
 
இதில் அவருக்கு இரட்டை வேடம். ரஞ்சனின் ஜோடி வசந்தரா தேவி. என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். படம் சூப்பர்ஹிட். எம்.ஜி.ஆருடன் 1945-ல் "சாலிவாகனன்" படத்தில் ரஞ்சன் கதாநாயகனாகவும், எம்.ஜி.ஆர். வில்லனாகவும் நடித்தனர்.
 
எம்.ஜி.ஆர். சிறிய வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டம் அது. கதைப்படி, விக்ரமாதித்தனுக்கும் (எம்.ஜி.ஆர்.), சாலிவாகனனுக்கும் (ரஞ்சன்) கத்திச்சண்டை நடக்கும். அதில் விக்ரமாதித்தன் கொல்லப்படுவார்.   உண்மையாகவே எம்.ஜி.ஆரும், ரஞ்சனும் கத்திச்சண்டையில் வல்லவர்கள். படப்பிடிப்பின்போது, இருவரும் ஆக்ரோஷமாக கத்திச்சண்டை செய்தார்கள்.
 
"வேண்டும் என்றே என்னை ராமச்சந்திரன் தாக்குகிறார்" என்று ரஞ்சன் புகார் செய்ய, அதே புகாரை எம்.ஜி.ஆரும் கூறினார். டைரக்டரும் மற்றவர்களும் தலையிட்டு, சமாதானம் செய்தார்கள். இந்தப்படத்தின் கதாநாயகி கே.எல்.வி.வசந்தா.
 
சந்திரலேகா
 
1948-ல் வெளிவந்த ஜெமினியின் பிரமாண்ட தயாரிப்பான "சந்திரலேகா"வில் எம்.கே.ராதாவுடன் இணைந்து நடித்தார், ரஞ்சன். கதாநாயகனுக்கு நிகரான முக்கிய வேடம் ரஞ்சனுக்கு. அவர் பிரமாதமாக நடித்தார். படத்தின் இறுதிக் காட்சியில் ரஞ்சனுக்கும், எம்.கே.ராதாவுக்கும் நடக்கும் கத்திச்சண்டை மெய்சிலிர்க்கச் செய்வதாகும்.
 
நிஷான்
 
இதை அடுத்து ஜெமினி தயாரித்த "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்தார். இந்தப் படம் "நிஷான்" என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது. தமிழில் ராதா நடித்த இரட்டை வேடத்தில், இந்தியில் ரஞ்சன் நடித்தார். படம் சூப்பர்ஹிட்.
 
இதே சமயத்தில், "சந்திரலேகா" இந்தியில் வெளியிடப்பட்டது. அந்தப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. ரஞ்சனின் கத்திச்சண்டை, வடநாட்டு ரசிகர்களை கவர்ந்ததால், ரஞ்சன் பம்பாயில் (இன்றைய மும்பை) குடியேறி இந்திப்படங்களில் நடித்தார். எல்லாமே வீர தீரச் செயல்கள் நிறைந்த படங்கள்.
 
பிறகு சின்னப்பதேவர் தயாரித்த "நீலமலைத்திருடன்" படத்திலும், வேறு சில தமிழ்ப்படங்களிலும் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் "கேப்டன் ரஞ்சன்.
 
பைலட்
 
ரஞ்சன் விமானம் ஓட்டக்கற்றவர். இசை, நடனம் ஆகிய கலைகளில் படித்து பட்டம் பெற்றவர். தமிழில் "நாட்டியம்" என்ற பத்திரிகையை நடத்தியவர்.
 
அமெரிக்காவில்...
 
ரஞ்சனின் மனைவி ஒரு டாக்டர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ரஞ்சன் தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்று, அங்கேயே நிரந்தரமாக குடியேறினார்.
 
மாரடைப்பில் மரணம்
 
1983-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி ரஞ்சன் `நியூஜெர்சி' நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஓட்டலிலேயே அவர் மரணம் அடைந்தார்.
 
அப்போது அவருக்கு வயது 65.
மதிப்பீடு செய்க