என் மலர்
சென்னை
- ஓர் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்த உழவர்களுக்கு ரூ.3.25 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
- பன்னீர் கரும்பு உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அரசு தான் போக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தோ, அதில் பொங்கல் கரும்பு இடம் பெறுமா? என்பது குறித்தோ தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் என்பதை நம்பி பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பொங்கல் திருநாள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொன்மொழி ஆகும். ஆனால், அரசை நம்பி பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு, ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தால், தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யப்படும் குளறுபடிகளால் ஆண்டுக்கு ஆண்டு வலி அதிகரிக்கிறது.
பொங்கல் கரும்புக்காக அரசால் நிர்ணயிக்கப்படும் விலை முழுமையாக உழவர்களுக்கு கிடைக்காததும், உழவர்களால் விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் ஆகும். ஒரு ஏக்கரில் சராசரியாக 20 ஆயிரம் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்ய முடியும். 20 ஆயிரம் கரும்புகளை நடவு செய்வதற்கு ரூ.80 ஆயிரம், அடுத்த 10 மாதங்களுக்கான வளர்ப்புச் செலவுக்கு ரூ.80 ஆயிரம் என ஏக்கருக்கு ரூ.1.60 லட்சம் செலவாகும். இது தவிர வெட்டுக் கூலி, கட்டுக் கூலி, ஏற்றுக்கூலி ஆகியவையும் உழவர்கள் தலையில் சுமத்தப்படுவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வரை செலவாகும்.
ஆனால், இவ்வளவு செலவு செய்து பன்னீர் கரும்பு சாகுபடி செய்தும் கூட உழவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான கூலி கூட கிடைப்பதில்லை. காரணம், கொள்முதல் முறையில் உள்ள குளறுபடிகளும், ஊழல்களும் தான். ஒரு முழு கரும்புக்கான கொள்முதல் விலையாக போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவற்றையும் சேர்த்து ரூ.35 வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்தக் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதில்லை.
மாறாக, இடைத்தரகர்கள் மூலமாகத் தான் அரசு வாங்குகிறது. வெட்டுக்கூலி, கட்டுக் கட்டும் செலவு, ஏற்றுக்கூலி ஆகியவற்றையும் சேர்த்து ஒரு கரும்புக்கு ரூ.18 அல்லது ரூ.19 மட்டுமே உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி ஆகியவற்றுக்காக மட்டும் ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.16 முதல் 17 வரை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
உழவர்களிடம் இடைத்தரகர்கள் 20 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்தால், அதில் 2 ஆயிரம் கரும்புகள் இலவசமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள 18 ஆயிரம் கரும்புகளுக்கு மட்டும் தான் விலை வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், ஓர் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்த உழவர்களுக்கு ரூ.3.25 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதில் ரூ.2.25 லட்சம் செலவு போனால், ரூ. 1 லட்சம் மட்டுமே மீதம் கிடைக்கும். அதில் நிலத்திற்கான குத்தகை, தண்ணீர் பாய்ச்சும் செலவு, முதலீட்டுக்கான வட்டி ஆகியவற்றையும் கழித்தால் உழவர்களுக்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்காது. இத்தகைய சூழலில் பன்னீர் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் எவ்வாறு இனிப்பாகவும், வலியின்றியும் இருக்கும்?
அதேநேரத்தில், உழவர்களிடமிருந்து பன்னீர் கரும்பை வாங்கி அரசுக்கு கொடுக்கும் இடைத்தரகர்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.17 லாபம் கிடைக்கும். அத்துடன் இலவசமாக கிடைக்கும் 10% கரும்பையும் சேர்த்தால், ஒரு கரும்புக்கு சராசரியாக ரூ.20 கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 2.26 கோடி கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ரூ.45 கோடி அவர்களுக்கு கிடைக்கும். அதை அவர்களும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பங்கிட்டுக் கொள்வதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆக, பொங்கல் கரும்பு வினியோகம் என்பது அதிகார வர்க்கத்திற்கும், இடைத்தரகர்களுக்கும் இனிப்பானதாகவும், உழவர்களுக்கு கசப்பானதாகவும் மாறிவிட்டது. திமுக ஆட்சியில் எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் தான் இதற்கு காரணம்.
உழவர்களின் துயரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 6 அடிக்கும் குறைவான உயரம் கொண்ட கரும்புகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று அரசு அறிவித்திருப்பதால், 7 அடி உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், 7 அடி உயரத்திற்கு கரும்பை விளைவிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. உயரம் குறைந்த கரும்புகளை அதிகாரிகள் நிராகரிப்பதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பு மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது பொங்கல் திருநாளில் இரு கரும்புகளை வைத்து படையலிடும் வழக்கத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி, உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 40 கோடி முதல் 50 கோடி கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன. இலவச கரும்பு வழங்கப்படுவதற்கு முன்பு வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சராசரியாக 10 அல்லது 20 கரும்புகளைக் கொண்ட கட்டுகளை வாங்குவார்கள் என்பதாலும், பொங்கலுக்கு இரு வாரத்திற்கு முன்பும், இரு வாரத்திற்கு பின்பும் பொங்கல் கரும்புகளை மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் விளைவிக்கும் கரும்பு முழுவதும் விற்பனையாகி விடும். உழவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.
ஆனால், இப்போது பன்னீர் கரும்பு பொங்கலுக்கு படைக்கும் பொருளாக மட்டும் மாறி விட்டதால், அரசால் கொள்முதல் செய்யப்படும் கரும்புகளைத் தவிர மீதமுள்ள கரும்புகளை வாங்குவதற்கு வணிகர்கள் முன்வருவதில்லை என்பதால் அவை வீணாகி உழவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன. பன்னீர் கரும்பு சாகுபடி தொடர்ந்து இழப்பை ஏற்படுத்துவதால், அது சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்த ஐந்தாண்டுகளில் பல மடங்கு குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பன்னீர் கரும்பு உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அரசு தான் போக்க வேண்டும். அதற்காக, நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்; இடைத் தரகர்கள் இல்லாமல் அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்து, போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி தவிர மீதமுள்ள தொகை முழுவதும் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
- மாவட்டங்கள் அனைத்திற்கும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாகி உள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடனும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக 80 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி? என்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
- மலர்கின்ற இப்புத்தாண்டு நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னை:
ஆங்கில புத்தாண்டு நாளை (வியாழக்கிழமை) பிறப்பதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை, இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மலர்கின்ற இப்புத்தாண்டு, தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், இயேசு அழைக்கிறார் தலைவர் பால் தினகரன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
தமிழக அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 1.4.2003-ந்தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
அதற்கு பிறகு வேலையில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தவிர ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று தங்களது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுத்து அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.
இதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கனவுக்கு இதில் முடிவு கிடைக்குமா? என்பது அன்றைய தினம் தெரிய வரும்.
- அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.
நாளை (1-ந்தேதி) அரசு விடுமுறை என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதால் அனைத்து வகையான சரக்குகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை களை கட்டும் என்பதால் எல்லா கடைகளிலும் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை புத்தாண்டு விற்பனை அனல் பறக்கக்கூடும். பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கூடங்கள் நிரம்பி இருக்கும். சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான அளவு எல்லா கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும். புத்தாண்டில் கூடுதலாக ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
- தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒருவழித் தடத்தில் நேற்று முடங்கியது. சென்ட்ரல்-கோயம்பேடு விமான நிலையம் நேரடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். சரி செய்யும் பணி இரவு வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து அந்த வழித்தடத்தில் சேவை தொடங்கியது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் (இன்டர்-காரிடார்) வரையிலான நேரடி ரெயில் சேவை மீண்டும் இயல்பான செயல்பாட்டை தொடங்கி உள்ளது.
ப்ளூ லைனில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் டிப்போ வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும் வார நாள் அட்டவணையின்படி இயங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 800-க்கு விற்பனை ஆனது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.
அதேபோல் வெள்ளி விலை கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31-ம், கிலோவுக்கு ரூ.31 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது இதுவரை இல்லாத உச்சமாக இருந்தது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? என்று புலம்பும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றுவிட்டது.
கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம், வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.258-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-12-2025- ஒரு கிராம் ரூ.258
29-12-2025- ஒரு கிராம் ரூ.281
28-12-2025- ஒரு கிராம் ரூ.285
27-12-2025- ஒரு கிராம் ரூ.285
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
- சந்தீப் மிட்டல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
- பிரேம் ஆனந்த் சின்ஹா தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.
செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.
அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.
அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
- ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே 'சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!' எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை.
- தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை.
தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.
- இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
- அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.
இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்.ஐ.சி. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
01-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
02 மற்றும் 03-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
02-01-2026 மற்றும் 03-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






