தோஷ பரிகாரங்கள்

திருமண தடை, குழந்தை பாக்கியத்திற்கு கரும்பீஸ்வரர் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

Update: 2023-01-28 06:12 GMT
  • இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
  • அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.

இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News