சினிமா செய்திகள்

கமல்ஹாசன் - ஜெயலட்சுமி

கமல்ஹாசனை திமுக அதிக பணம் கொடுத்து நடிக்க வைக்கிறது - பிரபல நடிகை குற்றச்சாட்டு

Published On 2022-08-08 10:10 GMT   |   Update On 2022-08-08 10:10 GMT
  • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் சினேகன்.
  • இவர் சின்னத்திரை நடிகை மீது புகார் மனு அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதில், "நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை பதிவு செய்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை செய்து வருகிறேன். சமீபமாக இணைய தளங்களில் எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்தது.


சினேகன்

நான் எனது மேலாளரை அனுப்பி விசாரித்தபோது, அவர் போலியான முகவரி, இணைய தளத்தை கொடுத்து என்னுடைய அறக்கட்டளையை இயக்குவது தெரிய வந்தது. எனவே, மோசடியில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அறக்கட்டளையில் இயங்கும் போலி இணையதளத்தை முடக்க வேண்டும்" இவ்வாறு சினேகன் தெரிவித்தார்.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள நடிகை ஜெயலட்சுமி, "நான் சினேகம் என்ற பெயரில் முறையான ஆவணங்களுடன் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்யும் நற்பணிகள் அனைத்தையும் எங்களது அறக்கட்டளை பெயரில் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.


ஜெயலட்சுமி

ஆனால் சினேகன் அவரது அறக்கட்டளை சார்பாக அப்படி எந்த விதமான நற்பணிகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக நான் பார்த்ததில்லை. சினேகன் கூறியது போல் அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த விதமான அழைப்புகளும் வரவில்லை. அரசியல் நோக்கத்தின் காரணமாக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

என்னை தவறாக சித்தரிக்கும் விதமாக சினேகன் பேசியுள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டுக்குப் பின்னால் கமல்ஹாசனும் இருப்பதாக எனக்கு சந்தேகமாக உள்ளது. திமுக கமல்ஹாசனை வாங்கியுள்ளது. திமுகவும், மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்றுதான். திமுக அதிகப் பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

சினேகன் என் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அப்படி அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

Tags:    

Similar News