சினிமா செய்திகள்

இந்தியாவில் சாதிகளே இல்லையா?.. 'Phule' படத்தின் தடைக்கு அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு!

Published On 2025-04-18 14:16 IST   |   Update On 2025-04-18 14:16:00 IST
  • தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் எனக் கூறினார்கள்.
  • சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?.

அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகி வரும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகும் இந்தப் படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் திரையரங்குகளில் வெளியாகும் முன் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் ( CBFC ) கேட்டுக் கொண்டுள்ளது.

'மஹர்', 'மாங்', 'பேஷ்வாய்' மற்றும் 'மனுவின் சாதி அமைப்பு' போன்ற வார்த்தைகள் உட்பட குறிப்பிட்ட சாதி குறிப்புகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் CBFC கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Full View

இந்நிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என் வாழ்க்கையில் நான் நடித்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே பற்றியது. இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் அவர்கள் எதற்கு போராடினார்கள்?.

இந்த படத்தால் பிராமணர்கள் வெட்கப்படுகிறார்கள். மத்திய தணிக்கைக் குழுவை தாண்டி மற்றவர்கள் எப்படி படத்தினை பார்க்கிறார்கள்? இந்த ஒட்டுமொத்த அமைப்புமே மோசமாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமல்ல ஏற்கனவே சந்தோஷ், தடாக் 2, பஞ்சாப் 95, டீஸ் ஆகிய படங்களுக்கும் இந்தப் பிரச்சனைகளால் இந்தியாவில் வெளியாகாமல் இருக்கின்றன.

சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?. இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்னச் செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள்.

தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.

தற்போது, பிராமணர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?. மோடியின் கூற்றுப்படி இந்தியாவில் சாதியப் பாகுபாடு இல்லை என்பதால் உங்கள் பிராமண சமூகம் இங்கே இல்லை. அல்லது எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News