என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.
    • மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.

    80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன் , மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

    இது தவிர்த்து ரேவதி மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார் ரேவதி. முதன் முதலாம் 2002 ஆம் ஆண்டு மிடிர், மை ஃப்ரெண்ட் என ஆங்கில படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான விருதை பெற்றது.

    இந்நிலையில், ரேவதி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், "நான் 11வது படித்துக்கொண்டு இருக்கும் போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளாரென அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா, யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்றார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

    நடிகை ரேவதியின் இந்த பேச்சுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • "கொஞ்சம் பொறுத்துக்கங்க" பொழுதுபோக்கான படம் தயாராகிறது.
    • சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் சிலம்பரசன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதலே நடிகர் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் நடிக்கும் "அரசன்" படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த வரிசையில், `டிராகன்' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரும், சிலம்பரசனும் இணையும் படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி தானும், நடிகர் சிலம்பரசன் இணையும் படம் `அரசன்' படம் முடிந்ததும் தொடங்கும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் தலைப்பு `I' என்ற வார்த்தையில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இது குறித்த X தள பதிவில், "பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கப் போகிறது. அரசன் படத்தைத் தொடர்ந்து நமது படத்தை தொடங்க காத்திருக்க முடியவில்லை. அவரது ரசிகர்கள் அனைவருக்கும், "கொஞ்சம் பொறுத்துக்கங்க" ரசிகர்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் தயாராகிறது. படத்தின் தலைப்பு "I" என்ற வார்த்தையில் தொடங்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நடிகர் சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணையும் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அரசன் ( முன்பு STR49) படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், இந்தப் படத்தைத் தொடர்ந்து STR 50 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது மீண்டும் உறுதியாகி இருப்பதோடு, படம் கைவிடப்படவில்லை என்பதையும் உணர்த்தியுள்ளது.

    "STR 50" தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் X தள பதிவிற்கு பதிலளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி "நமது படத்தை தொடங்க காத்திருக்க முடியவில்லை, பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிலம்பரசன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • காதலர் தினத்தில் இருவரது திருமணம் நடைபெறுகிறது என தகவல்கள் வெளியானது.
    • தகவலுக்கு தனுசும், மிருணாள்தாக்கூரும் எந்தவித பதிலும் வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

    நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாக்கூரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாக செய்திகள் காட்டுத்தீயாக பரவி வந்தது. அதுவும் காதலர் தினத்தில் இருவரது திருமணம் நடைபெறுகிறது எனவும் தகவல்கள் வெளியானது.

    இந்த தகவலுக்கு தனுசும், மிருணாள்தாக்கூரும் எந்தவித பதிலும் வெளிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் மிருணாள்தாக்கூர் திருமண விவகாரம் குறித்து கூறுகையில், என்னைப் பற்றியும், தனுசை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டும்தான். இவ்வாறு கூறி வதந்தி பரப்பும் வாய்களுக்கு 'பூட்டு' போட்டு விட்டார் மிருணாள் தாக்கூர்.

    • டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.
    • துரந்தர் தி ரிவெஞ்ச் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "டாக்சிக்". கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப் படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. நீண்ட கால படப்பிடிப்பில் உள்ள போதிலும், டாக்சிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.

    கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் நடிகர் யஷ் நடிக்கும் படம் என்பதால் "டாக்சிக்" படத்திற்கு துவக்கம் முதலே எதிரபார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் "துரந்தர் தி ரிவெஞ்ச்" மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

    பான் இந்தியா அளவில் கே.ஜி.எஃப். 2 மற்றும் துரந்தர் திரைப்படங்கள் வசூலில் ரூ. 1000 கோடியை கடந்து வெற்றி பெற்றன. இந்த நிலையில், யஷ் நடித்துள்ள டாக்சிக் மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் ஒரே நாளில் வெளியாவது உறுதியாகி இருக்கிது.

    எனினும், பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது போட்டியை வலுப்படுத்தும் என்பதோடு, எந்தப் படம் வெற்றி பெறும் என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை.

    • ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
    • பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.

    விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜனநாயகன்' படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சர்வதேச அளவில் வெளியாக இருந்த 'ஜனநாயகன்' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இதை தொடர்ந்து படம் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைப்பதாக அறிவித்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றும் படம் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    'ஜனநாயகன்' படம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

    'ஜனநாயகன்' படம் வெளியிடுவது ஜாக்பாட் என காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சமீபகாலமாக திரையரங்குகள் ஓ.டி.டி. பாதிப்பு மற்றும் பார்வையாளர்களின் வரத்து குறைவினால் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் 'ஜனநாயகன்' படத்தினால் நிம்மதி பெருமூச்சு விடலாம் என ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை உருவாக்கி உள்ளது.

    இது குறித்து திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறும் போது, 'தமிழக திரையரங்குகள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒற்றை திரையரங்குகள் பல மூடப்பட்டு வருகிறது. படங்களின் வெளியீட்டில் சரியான அட்டவணையை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தொழில்துறையில் உள்ள பிரச்சனைகளை ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்.

    பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. 'ஜனநாயகன்' படம் திரையரங்கத்தை மீண்டும் உயிர்பித்திருக்கும். பொங்கல் விடுமுறை 10 நாட்கள் இருந்தது. ஜனநாயகனுக்கு அது சரியான நேரமாக இருந்தது. ஆனால் 'ஜனநாயகன்' படத்தின் தாமதத்தால் தமிழக திரையரங்குகள் ரூ.100 கோடி வரை இழப்பை சந்தித்து உள்ளன என்றார்.

    தமிழ்நாடு திரையரங்குகளை பொறுத்தவரை விஜய் நடித்த கடைசி படம் 'ஜனநாயகன்' என்பதால் வசூலை பொறுத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பராசக்தி விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
    • வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    நாரி நாரி நடும முராரி:

    ஷர்வானந்தின் புதிய காதல் நகைச்சுவைத் திரைப்படம் 'நாரி நாரி நடும முராரி'. பொங்கலையொட்டி கடந்த மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.

    அன்ஃபாமிலியர்:

    புதிய ஜெர்மன் தொடர் 'அன்ஃபாமிலியர்' நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இத்தொடரில், சுசான் வுல்ஃப், ஃபெலிக்ஸ் க்ராமர், சாமுவேல் ஃபின்சி, ஆண்ட்ரியாஸ் பீட்ச்மேன், ஹென்றி ஹிப்சன், மஜாபோன்ஸ், செய்னெப்சலே, ஜெனிஜா ரிகோவா, நடாலியாபெலிட்ஸ்கி, ஆரோன் அல்டராஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கொம்பு சீவி:

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த டிசம்பவர் மாதம் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டார். 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 6-ந்தேதி டெண்ட்கோட்டா ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

    தி ராஜா சாப்:

    மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான படம் 'தி ராஜா சாப்'. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார். பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் கடந்த மாதம் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், வருகிற 6-ந்தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம்.

    நீலகண்டா:

    கிராமப்புறத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் 'நீலகண்டா'. இப்படம் கடந்த 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 6-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

    பராசக்தி:

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் 7-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

    • சமீபத்தில் துரந்தர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது
    • துரந்தர் பார்ட் 2 டீசர் இன்று வெளியாகிறது

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதும், இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துரந்தர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மையாளர் கடந்த 11-ந்தேதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார். இதை அடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார்.

    ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்தார். மேலும் பத்மாவுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • சவால்கள் நிறைந்த துறையில் 25 ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல.
    • எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சில தினங்களுக்கு முன் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "கால் நூற்றாண்டு காலக் காட்சிகளும் உணர்வுகளும்: திரைப்படம் என்பது வெறும் அசைவு படங்களை பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே பதிவு செய்வது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. நான் முதன்முதலில் "ஆக்ஷன்" என்று குரல் கொடுத்த நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் இந்த தருணத்தில், கடந்து போன காலத்தால் அல்ல, அந்த காலம் எனக்கு வாரி வழங்கிய நினைவுகளின் பெருக்கத்தால் நான் திக்குமுக்காடி போகிறேன்.

    இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்த துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. அது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் நெய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பு.

    எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது: என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கிய நடிகர்களே. என் வார்த்தைகளுக்கு நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்; பல சமயங்களில், கதாபாத்திரங்களில் நான் உணராத ஆழங்களை கண்டறிந்தீர்கள்.

    என் படக்குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் கேமராவுக்கு பின்னால் நின்ற, என் கற்பனையின் அமைதியான சிற்பிகளே, உங்களுக்கான என் நன்றியும் மரியாதையும், சினிமா மீது நாம் கொண்டுள்ள அன்பை போலவே ஆழமானது.

    நான் ஜாம்பவான்களின் தோள்களின் மீது நிற்கிறேன்; யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியை பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் - எனக்கு வழி காட்டியதற்கு நன்றி.

    என் சமகாலத்தவர்களுக்கும் சக இயக்குநர்களுக்கும், உங்கள் படைப்புகள் தினமும் எனக்கு சவாலையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன. கதை சொல்லும் இந்த பொதுவான பயணத்தில் நாம் பகிர்ந்துகொள்ளும் தோழமை விலைமதிப்பற்றது.

    இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு. என் கதைகளை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டீர்கள், என் கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்தீர்கள், நான் சித்தரிக்க முயன்ற அன்பு, மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை தழுவிக்கொண்டீர்கள். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.

    #YennoduVaaVeeduVaraikkum இசை நிகழ்ச்சியில் ஒரு நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத இரவை வழங்கியதற்கு நன்றி.

    நான் ஏன் இதை செய்கிறேன் என்பதை அறிந்துகொள்ள அது ஒரு ஆத்மார்த்தமான நினைவூட்டலாக இருந்தது.

    சினிமாவுடனான என் காதல் பயணம் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது...," என குறிப்பிட்டுள்ளார்.

    • கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான்.
    • ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் மாளவிகா மோகனன் நடிப்பில் விரைவில் 'சர்தார்-2' படம் திரைக்கு வரவிருக்கிறது. கவர்ச்சி படங்களை அடிக்கடி களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் மாளவிகா மோகனன், தற்போது எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும் கவர்ச்சி உடையிலேயே தரிசனம் தந்து அனைவரையும் விய(ர்)க்க வைத்து விடுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, "கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான். அந்தவகையில் என் உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு. எனவே ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன். என் உடைகளுக்கும், அழகுக்கும் வரும் ரசிகர்களின் 'கமெண்ட்'டுகளை ரசிக்கிறேன்'' என்கிறார்.

    கிளாசிக் படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன.

    சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆண்டு வெளியான படம் 'அமைதிப்படை'. இப்படத்தை இயக்கிய மணிவண்ணன்  அதில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். 

    மேலும், சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    இப்படத்தின் அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சை கடந்து எதார்த்த அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்த காட்டின.

    எந்த காலத்திற்கும் பொருந்தும் அமைதிப்படை கிளாசிக் அந்தஸ்து பெற்றது. அண்மைக் காலமாக கிளாசிக் படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வரும் நிலையில் அமைதிப்படை திரைப்படம் 4K தரத்தில் மேபடுத்தப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

    நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

    நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

    தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யூத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா கதாநாயகியாகவும், சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யூத் படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    ×