search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament"

    • சோனியா காந்தி போல் இந்தி தெரியாத இத்தாலியா் அல்ல.
    • ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு வருகிறாா்.

    சிம்லா:

    'காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுலைப் போல பிரதமா் மோடி ஒன்றும் இந்தி தெரியாத இத்தாலியா் அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் இந்த மண்ணின் மகன்' என இமாசல பிரதேச மாநிலம், மண்டி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்தாா்.

    குலு மாவட்டத்தில் பேரணியில் அவா் பேசியதாவது:-

    பிரதமா் மோடிக்கு பஹாடி உள்பட பல மொழிகள் தெரியும். சோனியா காந்தி போல் இந்தி தெரியாத இத்தாலியா் அல்ல. அவா் இந்த மண்ணின் மகன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு வருகிறாா்.


    மண்டி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை 6 முறை இமாசல பிரதேச முதல்வராக இருந்தவா். நீண்டகாலமாக அவரது குடும்பம் அதிகாரத்தில் ஒட்டியுள்ளது. ஆனால், மோடி தேநீா் விற்பனையாளராக இருந்தவா், இமாசலத்தின் முன்னாள் பா.ஜ.க. முதல்வா் ஜெய்ராம் தாக்கூா் கொத்தனாரின் மகன்.

    ஒரு புறம் மோடியின் நல்லாட்சி மற்றொருபுறம் காங்கிரசின் ஊழல் ஆட்சி இதில் பா.ஜ.க.வின் நல்லாட்சிக்கு ஜூன் 1-ந் தேதி வாக்களிக்க இமாசல மக்கள் முடிவெடுத்து விட்டனா் எனஅவா் தெரிவித்தாா்.

    பா.ஜ.க.வினா் ஓடாத படம் எடுத்து வருவதாக ஹிமாசல முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு முன்னா் தெரிவித்திருந்தாா். கங்கனா ரணாவத் நல்ல நடிகைதான் ஆனால் அவரின் இந்த படம் ஜெய்ராம் தாக்கூா் மற்றும் பாஜக தலைவா் ராஜீவ் பின்டல் போன்ற கதாசிரியா்களைக் கொண்டதால் தோல்வி படமாக அமையப்போவதாக அவா் கூறினாா்.

    இதற்குப் பதிலளித்த கங்கனா ரணாவத், ஜெய்ராம் தாக்குரின் ஐந்தாண்டுக்கால ஆட்சி சூப்பா் ஹிட் ஆனது, ஆனால் சுக்கு தனது 15 மாதங்கள் பணியில் தோற்றுவிட்ட தாகத் தெரிவித்தாா்.

    • அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

     

    • பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
    • நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா எவ்வாறு தயாரானது?

    பதில்:- வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல் உழைக்குமாறு கட்சி உறுப்பினர்களை ஓராண்டுக்கு முன்பே கேட்டுக் கொண்டேன். நாங்கள் அனைவரும் தாமரைக்காக உழைத்தோம். எதிர்க்கட்சிகள் கூட தாமரைக்காக உழைக்கின்றன. அவர்கள் எவ்வளவு சேற்றை அள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மலரும்.

    பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அடுத்து வரும் எங்களின் ஆட்சியின் முதல் 125 நாட்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளேன். இதில் 25 நாட்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும்.

    கேள்வி:- மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்களே?

    பதில்:- மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான அமலாக்க இயக்குநரகம் 2014-ம் ஆண்டுக்கு (காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ்) முன் பயனற்றதாக இருந்தது. தற்போது திறம்பட செயல்படத் தொடங்கி உள்ளது.

    ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, ஏழைகளுக்கு திருப்பி அளிக்கும் வகையில், சட்டத்தை உருவாக்க வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அமலாக்கத்துறையால் இதுவரை கைப்பற்றப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடியை ஏழைகளுக்கு திருப்பி கொடுத்துள்ளேன்.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே உடையை நோக்கிய நகர்வாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறதே?

    பதில்:- கோவா மக்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்களா? கோவா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுகிறார்களா? பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இது எந்த அரசியல் கட்சியின் விவகாரமும் அல்ல. இது அரசியல் நிர்ணய சபையில் இருந்து வந்தது.

    கேள்வி:- நாட்டின் அரசியலமைப்பை மாற்றவும், கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நீக்கவும் பா.ஜனதா விரும்புவதாக கூறப்படுகிறதே?

    பதில்:- ஜவகர்லால் நேருவில் தொடங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெவ்வேறு காலங்களில் அரசியலமைப்பை கிழித்தெறிந்தனர். அரசியலமைப்பை அவர்கள் தாக்கிய காலம் வெகு தொலைவில் உள்ளது. அதனால்தான் இன்று நான் தைரியமாக மக்களிடம், மோடி உயிருடன் இருக்கிறார் என்று சொல்கிறேன். இந்தியாவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறிய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உணர்வுக்காக போராடுவேன். அதற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்.

    கேள்வி:- பா.ஜனதா அரசு பணக்காரர்கள் சிலருக்கு பலன்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது பற்றி?

    பதில்:- என்னால் நேர்மையற்ற முறையில் யாரேனும் பயனடைந்தால் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் தவறான வழியில் யாருக்காவது நன்மை செய்திருந்தால் நான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன். செல்வத்தை உருவாக்குபவர்கள்-தொழிலாளர்களைப் பற்றி சமமாக கவலைப்படுகிறேன்.

    கேள்வி:- நீங்கள் வகுப்புவாத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

    பதில்:- நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன். ஆனால் முத்தலாக் தவறு என்று நான் சொன்னால், முஸ்லிம் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டேன்.

    நான் இப்படி முத்திரை குத்தப்பட்டால் அது விமர்சிப்பவர்களின் நிர்ப்பந்தம் ஆகும். என்னுடையது அல்ல. நீங்கள் (எதிர்க்கட்சிகள்) வகுப்புவாதத்தை பின் பற்றினீர்கள். நான் அதை அம்பலப்படுத்தினேன். அவர்களின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை ஒப்பந்த முறையில் கொண்டு வருவோம் என்பதை நான் எதிர்த்தால், அதை மதச்சார்பின்மை காரணமாக செய்கிறேன். இதனால் நான் சிறு பான்மையினரை தாக்குவது போல் காட்டப்படுகிறது.

    கேள்வி:- 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்று கூறுவது பற்றி?

    பதில்:- வெற்றி தோல்வி பற்றி நான் ஒருபோதும் கூறவில்லை. 400 இடங்களைப் பற்றி முதலில் பேசியது மக்கள்தான். மக்களின் பார்வையை அறிந்துதான் அதை கூறினேன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 400 இடங்களைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த முறை 400-யை தாண்டிச் செல்ல வேண்டும் என்று சொல்வது ஒரு தலைவராக எனது கடமையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • 1-ம் கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
    • 2-ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

    1-ம் கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளும், 2-ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் 3-ம் கட்ட தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், 4-ம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், மத்தியபிரதேசம், அருணாலப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் நான்கு கட்ட தேர்தல்களில் தற்போதுவரை 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த 4 கட்ட தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    • சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
    • ஆய்வுக் கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10 நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்தார். இப்போது சென்னை திரும்பிவிட்டார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் அரசு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் முன்நின்று நடத்த முடியாது என்பதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    தேர்தலுக்கு முன்பு தி.மு.க. இளைஞரணியின் செயல்பாடு பற்றி விசாரிப்பதற்காக, மண்டல அளவில் இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களை அழைத்து கருத்து கேட்டு வந்தார். அந்த வகையில் சென்னை, அந்தமான் உள்ளிட்ட 1-வது மண்டல நிர்வாகிகளை அழைத்து அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

    அதன் பிறகு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி அடங்கிய 2-வது மண்டலம் நிர்வாகிகள் அழைத்து கட்சி பணிகள் குறித்து விசாரித்து வந்தார்.

    மாவட்டச் செயலாளருக்கும் உங்களுக்கும் ஒத்துப் போகிறதா? ஏதாவது பிரச்சனை இருந்தால் தைரியமாக சொல்லுங்கள் என்று மாவட்ட அமைப்பாளர்களிடம் தனியாக கருத்து கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார். யாரையாவது மாற்ற வேண்டுமா? என்றும் கேட்கிறார்.


    அதுமட்டுமின்றி மாவட்ட அமைப்பாளர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள மினிட் புத்தகத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்கிறார். செயல்பாடுகள் நன்றாக இருந்தால் சிறப்பாக உள்ளது என்று கையெழுத்திடுகிறார். செயல்பாடு சரியில்லை என்றால் அதையும் மினிட் புத்தகத்தில் எழுதி விடுகிறார்.

    இதுவரை முதல் இரண்டு மண்டலங்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது 3-வது மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் நாளை மாலை (வியாழன்) 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். முதலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை அழைத்து அவர்களின் கட்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மாநில துணைச் செயலாளர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறும்.

    இந்த கூட்டம் முடிந்ததும் 4.30 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை அழைத்து விசாரிக்கிறார். அதன் பிறகு மாலை 5 மணிக்கு புதுச்சேரி மாநில அமைப்பாளர்களுடன் ஆய்வு நடத்துகிறார்.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம், 4.30 மணிக்கு வேலூர் மாவட்டம் மாலை 5 மணிக்கு வேலூர் மாநகரம் 5.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர்களுடன் ஆலோசிக்கிறார்.

    தி.மு.க. இளைஞரணியில் ஒன்றிய நகர பேரூர் பகுதி இளைஞரணிக்கு இன்னும் பொறுப்புகள் போடப்படாமல் உள்ளதால் அதில் யார் யாரை நியமிக்க இருக்கிறார்கள். என்ற விவரங்களையும் கேட்டறிகிறார்.

    இதுபற்றி தி.மு.க. இளைஞரணியில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இளைஞரணியின் செயல்பாடு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தி இருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

    முதலில் மாவட்ட அமைப்பாளருடன் தனியாக 20 நிமிடம் பேசுகிறார். அப்போது மாவட்டத்தில் உள்ள பிரச்சனை என்னென்ன என்பதை விவரமாக கேட்டறிகிறார். ஏதாவது குறை இருக்கிறதா? என்றும் கேட்கிறார்.

    மாவட்டச் செயலாளரின் செயல்பாடு பற்றியும் விசாரிக்கிறார். சட்டமன்ற உறுப்பினரின் அணுகுமுறை பற்றியும் கேட்டறிகிறார். அதன் பிறகு மாதாமாதம் என்ன நிகழ்ச்சி நடத்துகிறோம் என்பதை பார்க்கிறார். துணை அமைப்பாளர்கள் யாரையாவது மாற்றி கொடுக்க வேண்டுமா? என்றும் கேட்டறிகிறார்.

    இப்போது பாராளுமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதில் யார்-யார் சரியாக பணியாற்றவில்லை என்பதையும் கேட்டறிவார். ஏற்கனவே தேர்தலில் சரிவர பணியாற்றாதவர்கள், பணம் செலவழிக்காமல் ஜகா வாங்கியவர்கள் சிலர் பற்றி தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளதால் அதுபற்றியும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விசாரிப்பார் என தெரிகிறது.

    தேர்தலில் வாக்கு குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்ததால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சியை மறுசீரமைக்கும் பணி தொடங்கும் என்பது உண்மை. அப்போது சில மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்களின் ஏரியாவில் வாக்கு குறைந்தாலும் நடவடிக்கை இருக்கும் என்பதால் அதன் முன்னோட்டமாக இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியினரிடம் இப்போது முழுமையாக விசாரிப்பார் என தெரிகிறது.

    தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி பல ஊர்களுக்கு சென்று வந்ததால் அங்குள்ள கள நிலவரம் அனைத்தும் அவருக்கு தெரியும். இந்த நிலையில் இளைஞரணி அமைப்பாளர்கள் என்ன சொல்ல உள்ளனர் என்பதையும் தெரிந்து கொள்ள இந்த ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்துகிறார்.

    எனவே தேர்தல் முடிவு வந்த பிறகு தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சரிவர செயல்படாத சிலரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. வட்டா ரத்தில் பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.

    • நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை.
    • கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதாக தகவல்கள் பரவியது. குறிப்பாக தேர்தல் பிரசார கூட்டங்களில் மத ரீதியாக பிரதமர் மோடி பேசுவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசிய ஒரு பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நான் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் அப்படி பேசியதாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் பற்றி நான் தவறாக பேசியதாக பரவிய தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசினால் அது முஸ்லிம்கள் பற்றி பேசியதாக உங்களுக்கு யார் சொன்னது. நான் அப்படி பேசியது நாட்டில் உள்ள ஏழை மக்கள் பற்றியதாகும்.

    எங்கு அதிக வறுமை இருக்கிறதோ அங்கு அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இதைதான் நான் குறிப்பிட்டு பேசினேன். அதை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் பற்றி நான் பேசியதாக அநீதி இழைப்பது ஏன்?

    நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை. நான் மத ரீதியாக பேச தொடங்கினால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஆகி விடுவேன். நான் ஒருபோதும் அப்படி செயல்படுவது இல்லை.

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய கலவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்போது நான் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தேன். கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

    என்னை இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் போல சித்தரிக்கிறார்கள். எனது வீட்டை சுற்றி அதிக அளவில் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்களில் எங்களுடைய வீட்டில் உணவு சமைக்கப்படுவது இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு உணவு வந்து விடும்.

    எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் எங்களுக்கு அடிக்கடி விருந்து தருவார்கள். அவர்களோடு ஒருங்கிணைந்துதான் நான் வாழ்ந்தேன். எனது சிறு வயது வாழ்க்கை அப்படித் தான் அமைந்து இருந்தது.

    இப்போது கூட எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு என் மீதான இமேஜ் மாற்றப்பட்டு விட்டது.

    இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் எனக்காக வாக்களிப்பார்கள். நான் மத ரீதியாக பேசவில்லை என்பது அவர்களுக்கு புரியும்.

    நான் இந்து, முஸ்லிம் பற்றி பேசுவது இல்லை. இதனை எனது வாக்குறுதியாகவே மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி நேற்று பத்மாவதி பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை பார்வையிட சென்றார்.

    அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர். பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பியால் நானியை தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடைய பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதால் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி சந்திரகிரி ஆகிய இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு நிலைமை மோசம் அடைந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தாடிப்பட்டியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி இரு தரப்பினரையும் போலீசார் கலைத்தனர்.

    இதே போல நேற்று தாடிபத்திரி தொகுதியில் இரு கட்சியினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

    இந்த தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தாடிபத்ரி நகரப் பகுதியில் குவிந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

    இந்த 3 இடங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் அமைதியாக தேர்தல் நடத்துவதில் போலீசார் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
    • அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.

    மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

    இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு அடிதடி மோதல் என தேர்தல் காரசாரமாக முடிந்தது. திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் 2 வாலிபர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர்.

    அவர்களை பார்த்து சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர்கள், இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்தனர். கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

    பிறகு, அவர்களை இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். வாலிபர்களை துணை ராணுவத்தினர் அடித்து வெளுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
    • ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

    ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.

    இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.


    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.

    2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார்.
    • கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று சட்டப்பேரவை, பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    பாபட்லா மாவட்டம், கரம் சேடுவில் உள்ள அம்பேத் நகரை சேர்ந்தவர் கர்னெபுடி சிங்கையா. இவரது மனைவி கர்னெபுடி சித்தேம்மா (வயது 60). கர்னெபுடி சிங்கையா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென கர்னெபுடி சிங்கையா உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். தனது கணவர் இறந்து விட்டதால் கர்னெபுடி சித்தேம்மா துக்கத்தில் இருந்தார்.

    கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார். கணவர் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு கர்னெபுடி சித்தேம்மா வாக்கு சாவடிக்கு சென்றார். கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    காலையில் வாக்கு பதிவு தொடங்கியதும் தாடிப்பத்திரி என்ற இடத்தில் இரு கட்சி கடுமையாக மோதி கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    குண்டூர் அருகே உள்ள நரசராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்கள் அனைத்தும் எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு பிறகும் தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

    நரசராவ்பேட்டை நகரப் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்களுக்குள் கலவரம் வெடித்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபி ரெட்டி சீனிவாஸ் எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது பின்னோக்கி செல்வது போல சென்ற தொண்டர்கள் மீண்டும் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு ஓடி வந்து கற்களை வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்நாடு பகுதியில் இரவிலும் தெலுங்கு தேசம் ஒய்எஸ்ஆர் கட்சியை காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதே போல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் இரவிலும் மோதல் நீடித்தது. மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×