search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer"

    • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
    • பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால் மே மாதம் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி உடலை துர்நாற்றம் வீச செய்கிறது.

    வெயிலின் தாக்கத்தினால் வியர்வை வெளியேறுவது, நீர் இழப்பு, உடல் துர்நாற்றம், அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்சனை, சிறுநீரகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

    குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வரை அதிகமாக வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்

    1. கோடை காலத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

    2. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    3. உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாகுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.

    4. அதிக வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.

    5. காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    6. அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் டியோ ட்ரெண்ட், கிரீம்கள், லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் உடலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
    • பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

    வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின.
    • சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

    வரலாறு...

    இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதைவிட எதிர்கால தேடல்களே மேலோங்கி இருக்கிறது. பலருக்கு இன்னும் தனது குடும்ப பரம்பரை பற்றியே தெரியாமல் இருப்பதுதான் வேதனை. அன்றைய காலத்தில், 7 தலைமுறைகளை அறிந்து வைத்திருந்தார்கள். தந்தை - தாய், பாட்டன் - பாட்டி, பூட்டன் - பூட்டி, ஓட்டன் - ஓட்டி, சேயோன் - சேயோள், பரன்-பரை என்று அதை வரிசைப்படுத்தினார்கள்.

    ஆனால், இன்றைக்கு 3-வது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி கூட யாருக்கும் தெரியவில்லை. கடந்த காலங்களில் சொந்த ஊரிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஏராளம். பெரிய வீட்டில் மரங்கள் சூழ்ந்திருக்க, தாத்தா - பாட்டி, பெரியப்பா - பெரியம்மா, சித்தப்பா - சித்தி, அத்தை - மாமா, அவர்களின் பிள்ளைகள என ஆரவாரத்துக்கும், ஆசுவாசத்துக்கும் பஞ்சம் இருக்காது.

    என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே ஒரு கூட்டு கிளிகளாக இருந்த கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின. "நாம் தான் சொந்த ஊரில் கஷ்டப்படுகிறோம். நம் பிள்ளையாவது நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கட்டுமே" என்று, முதலில் பெற்றோர் விருப்பத்துடன் படிப்புக்காக வெளியூருக்கு செல்லும் குழந்தைகள், பிறகு படித்து முடித்து அங்கேயே வேலையைத் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். திருமணமான பிறகும், வெளியூரிலேயே குடும்பத்துடன் தங்கிவிடுகிறார்கள். இப்படித்தான் கூட்டு குடும்பங்கள் எல்லாம் எங்கெங்கோ தனிக்குடும்பங்களாக பிரிந்து சிதறி கிடக்கின்றன. 

    சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடினமான பணியில் இருக்கும் சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் போய்விடுகிறது. பெற்ற பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் வெளியூரில் இருக்க, சொந்த ஊரில் தனி மரமாய் ஏக்கத்துடன் காத்திருந்து முதுமையை கழிக்கும் பெற்றோர் ஏராளம்.

    தாய்-தந்தையுடன் வெளியூரில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தனது பூர்வீகத்தை பற்றியும், சொந்த பந்தங்களை பற்றியும் தெரியாமலேயே போய்விடுகிறது. தாயும், தந்தையும் வேலை.. வேலை.. என்று பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், பிறந்த மண்ணின் மகத்துவத்தை பிள்ளைகளிடம் எடுத்துச்சொல்வதற்கு கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.

    இப்போது கோடை காலம். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை காலம். இந்த நேரத்திலாவது, நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை சொந்த கிராமத்தில் தாத்தா - பாட்டி வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். நமக்குத்தான் விடுமுறை கிடைக்கவில்லை. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளாவது சொந்த ஊரில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகை செய்யலாம். அங்கு பெற்ற பிள்ளைகளுக்காக ஏங்கித் தவிக்கும் முதியவயதுடைய பெற்றோர், பேரப்பிள்ளைகளை பார்த்தாவது சற்று நெஞ்சம் குளிர்வார்கள். குழந்தைகளுக்கும் உண்மையான அன்பு, பாசம் கிடைக்கும்.

    காகிதத்தால் செய்யப்பட்ட பட்டம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், அதன்பிடி நூலின் அடிப்பகுதியில்தான் இருக்கிறது. அதுபோலத்தான், நாம் இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழ்ந்து வந்தாலும், நமக்கான பிணைப்பு நாம் பிறந்த சொந்த ஊருடன்தான் இருக்கிறது. எனவே, சொந்த மண்ணையும், மண்ணில் வசிக்கும் உறவுகளையும் பேணிக் காப்போம்.

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலாம்பாளையம், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அறுவடைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் லேசாக சாரல் மழை பெய்தது.

    • சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

    கோடை வெயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பநிலை, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படும். எனவே கோடை வெயிலில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:

    * அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என்று காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். விருப்பப்படும் பழங்களை சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * காலை 10 மணி முதல் மாலை 4 மணி வெயில் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் குடை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடையை தவிர்க்க வேண்டும்.

    * குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. 

    * உணவுகளை 5 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் உண்ண வேண்டும்.

    * தூக்கம் வரும் நேரத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூங்குவதால் மன அழுத்தம் குறையும். 

    • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சி:

    கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

    அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


    ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

    • திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.
    • சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை தஞ்சையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இதேப்போல் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொள்ளிடம் புத்தூர், தைக்கால், ஆச்சாள்புரம், புதுப்பட்டினம், சந்தபடுகை, திட்டுபடுகை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இதேப்போல் நாகை மாவட்டம் நாகூர், பணக்குடி, மஞ்சக்கொல்லை, புத்தூர், சிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை மழை பெய்து குளிர்வித்தது.

    தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்ததோடு வெப்பம் ஒரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும்கோடை குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் இன்றி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை விதைப்புகள் கருகி வந்ததால் வேதனையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.89 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம் -குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரும்பள்ளம் அணை, குண்டேரி அணை, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 9 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் தென்னிந்தியாவில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் மே 7 வரையிலான காலகட்டத்தில் 23.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 74.9 மி.மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது.

    • பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர்.
    • கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    வீட்டிற்குள் இருந்தாலும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. மின்விசிறி ஓடினாலும் அதனையும் தாண்டி வீட்டிற்குள் வெப்பம் நிலவி வந்தது.

    கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்காவது நிழல் கிடைத்தால் சற்று நேரம் அங்கு நின்று இழைப்பாறி சென்று வருகின்றனர்.

    வழக்கமாக கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்து மே முதல் வாரம் ஆகியும் இதுவரை மழையே பெய்யவில்லை.

    கடுமையான வெப்பமே நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர். பல்வேறு இடங்களில் வழிபாடுகள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எனவும் நடத்தப்பட்டது.

    கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் மாநகர பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக சூறைக்காற்று வீசியது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவை மாநகர பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், உக்கடம், காந்தி பார்க் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இரவிலும், இன்று காலையும் குளிர்ச்சியான காற்றும் வீசியது.

    கோவையில் இன்று காலையும் வெயில் குறைந்து மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

    இந்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளதால் மழையை எதிர்பார்த்து கோவை மக்கள் காத்திருக்கின்றனர்.

    ×